மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த ஆணைக்குழு அமைக்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளது வெறும் கண்துடைப்பு நாடகம் என்று தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா மரணம் பற்றி விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக்கமிஷன் அமைக்கப்படும் என்று முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இது குறித்து கருத்து தெரிவிக்கும் விதமாக தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இறந்து 8 மாதங்கள் கழித்து, ‘அவரது மர்ம மரணம் குறித்து விசாரிப்பதற்காக விசாரணை ஆணையம் அமைக்கப்படும்’, என்று முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பு ‘ஊழல் அணிகள் சங்கமம்’ ஆவதற்காக அரங்கேற்றப்பட்டுள்ள கண்துடைப்பு நாடகம்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும், பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பிலும் அம்மையார் ஜெயலலிதா அவர்களின் மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பல மாதங்களாக தொடர்ந்து கோரிக்கை எழுப்பிய போதும், அதற்கெல்லாம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மர்ம மரணத்தின் தடயங்கள்,
வீடியோ காட்சிகள் அனைத்தும் அழிக்கப்பட வேண்டும் என்று அமைதி காத்தவர்கள்தான் முன்னாள் முதலமைச்சர் திரு. ஓ.பன்னீர்செல்வமும், இன்னாள் முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிசாமியும் என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் 22.9.2016 அன்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு 5.12.2016 அன்று மரணம் அடையும் வரை அத்தனை ரகசியங்களையும், மர்மங்களையும் மறைத்தவர்கள்
இந்த இருவரும் மட்டுமல்ல – அமைச்சர்களும்தான். அதிலும் குறிப்பாக முன்னாள் முதலமைச்சர் திரு ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் 11.10.2016 முதல் அம்மையார் ஜெயலலிதா அவர்களின் பொறுப்புகள் அனைத்தையும் கவனித்து முதலமைச்சர் பொறுப்பிலே இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் பிறகு 5.2.2017 அன்று தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யும் வரை அமைதியாக இருந்த திரு. ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் சமாதி முன்பு 40 நிமிடங்கள் தியானம் இருந்து விட்டு திடீர் ஞானோதயம் வந்தவராக ‘பொறுப்பில் உள்ள உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் அம்மாவின் மரணம் குறித்து விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும்’, என்று அறிவித்தார். திரு. எடப்பாடி பழனிசாமி பிப்ரவரி 16 ஆம் திகதி முதலமைச்சராக நியமிக்கப்படும் வரை விசாரணைக்கான எந்த உத்தரவும் வெளியாகவில்லை.
இந்நிலையில் முதல்வராக பதவியேற்ற திரு எடப்பாடி பழனிசாமி பிப்ரவரி 16 ஆம் தேதியிலிருந்து ஏறக்குறைய ஆறு மாதங்கள் ஜெயலலிதாவின் மரணம் குறித்து எவ்வித விசாரணைக்கும் உத்தரவிடவில்லை.
விசாரணைக் கமிஷனை அமைக்கவும் முன் வரவில்லை. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு வைத்தியநாதன் அவர்கள், ‘ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது’, என்று கூறிய பிறகும் கூட இப்படியொரு விசாரணைக் கமிஷனை அமைக்கவில்லை. மாறாக, ‘முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறது’, என்று பேட்டியளித்த டாக்டர் சீதாவை ஒரு பெண் என்றும் பாராமல் கைது செய்து சிறையில் அடைத்தது திரு. எடப்பாடி பழனிசாமி அரசுதான்.
இப்படி, சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் இந்த கோரிக்கை வைக்கப்பட்ட போதெல்லாம் ‘அது குறித்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் இருக்கிறது’, என்று கூறி தட்டிக் கழித்தது மட்டுமல்ல, தடயங்களை முழுவதும் மறைக்க உதவி செய்தவர்கள்தான் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், அவரது அமைச்சரவை சகாக்களும். செப்டம்பர் 22-ஆம் தேதியிலிருந்து டிசம்பர் 5 ஆம் தேதி வரை முதலமைச்சரின் பொறுப்புகளை கவனித்து வந்த திரு. பன்னீர்செல்வம், முக்கியத்துவம் வாய்ந்த ஐவர் குழு அமைச்சர்களாக இருந்தவர்களில் ஒருவரான திரு. எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் உடல்நிலை குறித்த மர்மங்களை மறைத்தார்கள்.
இப்போது ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளமை வெறும் கண்துடைப்பு என மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

