மழை, வெள்ளத்தில் மிதக்கும் வடகிழக்கு மாநிலங்கள்: அசாமில் 15 பேர் பலி

447 0

வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்ட மழை,வெள்ளத்தால் பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அசாமில் வெள்ளபாதிப்பில் 15 பேர் பரிதாபமாக பலியாகினர்.

வடகிழக்கு மாநிலங்களான அசாம், உத்தரகாண்ட், மேற்கு வங்காளம், பீகார், மணிப்பூர் மற்றும் திரிபுராவில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அந்த மாநிலங்களில் ஓடும் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பல லட்சம் மக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். மேலும், பல லட்சம் ஏக்கர் மதிப்பிலான விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.

இந்நிலையில், அசாமில் கடந்த வியாழக்கிழமை முதல் பெய்து வரும் கனமழையால் 21 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. பிரம்பபுத்திரா மற்றும் பத்திற்கும் மேற்பட்ட ஆற்றில் நீரானது அபாயக் கட்டத்தை தாண்டி ஓடுகிறது. வெள்ளத்தில் சிக்கி 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 22 லட்சத்திற்கு மேலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து நேற்று நடைபெற்ற அவசர கூட்டத்தில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு இந்திய விமானப்படையை ஈடுபடுத்த வேண்டும் என ராணுவத்திற்கு அசாம் அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

அசாம் மாநில பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் கூறுகையில், 1.83 லட்சத்திற்கு மேலான மக்கள் தாழ்வான பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டு 678 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என கூறினர்.

Leave a comment