சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் வாலிபர் ஒருவரிடம் இருந்து ரூ.10 கோடி மதிப்புள்ள கோகைன் போதைப் பொருளை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து நேற்று இரவு டெல்லி புறப்படும் ரெயிலில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில, போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், டெல்லி செல்லும் ரெயிலை சோதனையிட்டனர்.
அப்போது மிசோரம் மாநிலத்தை சேர்ந்த விஷால் (வயது 27) என்ற இளைஞரை கைது செய்து, அவரிடம் இருந்து 10 கோடி ரூபாய் மதிப்புள்ள கோகைன் போதைப்பொருளை கைப்பற்றினர்.
இதுகுறித்து போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மண்டல இயக்குனர் புரூனோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கைது செய்யப்பட்ட விஷாலுக்கு ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த ஒருவர் போதைப்பொருளை கொடுத்து டெல்லியில் சப்ளை செய்யும்படி அனுப்பியிருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த போதைப்பொருள் தென் அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்பட்டிருக்கலாம். தென் அமெரிக்க கடத்தல் கும்பலிடம் வேலை செய்யலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அவரிடம்வி சாரணை நடைபெற்று வருகிறது’ என தெரிவித்துள்ளார்.

