வடமாகாணசபையின் அடுத்த கட்டம்? – நிலாந்தன்

333 0

கடந்த மாதம் ஒன்பதாம் திகதி யாழ்ப்பாணம் கலைத்தூது மண்டபத்தில் ஒரு கூட்டம் நடந்தது. ஒரு மாற்று அணியைக் குறித்து சிந்திக்கும் தரப்புக்கள் அதில் பங்குபற்றின. அதே நாள் மாலை மேற்படி சந்திப்பில் பங்குபற்றிய அரசியற்கட்டுரை எழுதுபவர்கள் சிலரும், ஓர் ஊடகவியலாளரும் முதலமைச்சர் விக்னேஸ்வரனைச் சந்தித்தார்கள். அச்சந்திப்பை ஒழுங்குபடுத்தியவரும் அதில் பங்குபற்றினார். சுமார் மூன்று மணித்தியாலங்களுக்கும் மேலாக சந்திப்பு நடந்தது. பலதைப் பற்றியும் உரையாடப்பட்டது. ஒரு மாற்று அணியைக் குறித்தும் உரையாடப்பட்டது. விக்னேஸ்வரன் மிகவும் வெளிப்படையாகப் பேசினார். ஐக்கியத்தைக் குலைப்பது இப்பொழுது நல்லதல்ல என்பதே அவருடைய பதிலின் சாராம்சமாக இருந்தது.

சம்பந்தரை பகைத்துக் கொண்டு ஒரு மாற்று அணிக்கு அவர் தலைமை தாங்க வரமாட்டார் என்பதை ஊகிக்கத்தக்க விதத்தில் அவர் கதைப்பார். சம்பந்தரோடும், மாவையோடும் உரையாட முடியும் என்று அவர் நம்புவது தெரிந்தது. அவருக்கும், கட்சித்தலைமைக்கும் இடையிலான முரண்பாட்டை அவர் நபர்கள் சம்பந்தப்பட்டதாகவே விளங்கி வைத்திருக்கிறாரா? என்ற கேள்வியும் எழுந்தது. அம் முரண்பாடுகளை அவர் செயல் வழிகளுக்கிடையிலான முரண்பாடுகளாக அவற்றின் ஆழமான பரிமாணத்தில் விளங்கிக் கொள்ளவில்லையா? என்ற கேள்வியும் எழுந்தது.

அச்சந்திப்பு நடந்த அடுத்தடுத்த நாள் அது பற்றிய விபரங்களின் ஒரு பகுதி யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் காலைக்கதிர் பத்திரிகையில் தலைப்புச் செய்தியாக பிரசுரிக்கப்பட்டிருந்தது. அச் சந்திப்பில் பங்குபற்றியவர்களில் ஒருவரே அது பற்றிய விபரங்களை அப்பத்திரிகைக்கு வழங்கியிருக்கிறார் என்பதே இதிலுள்ள கேவலமான விடயமாகும். அவ்வாறு வழங்கியமைக்கான உள் நோக்கங்கள் எவை என்பது துலக்கமாகத் தெரியவில்லை. ஆனால் ஒரு மாற்று அணி குறித்து அதிகம் எழுதி வரும் நபர்களோடான சந்திப்பு ஒன்றில் விக்னேஸ்வரன் அவ்வாறு தெரிவித்தமை என்பது ஒரு மாற்றைக் குறித்து எதிர்பார்ப்போடு காணப்பட்ட தரப்புக்களுக்கு குழப்பமான சமிக்ஞைகளை வழங்கியது. அதே சமயம் சம்பந்தருக்கும், தமிழரசுக்கட்சிக்கும் அது பகை தவிர்ப்பு சமிக்ஞைகளைக் காட்டியது.

ஏற்கெனவே நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை முன்னகர்த்திய பொழுது சம்பந்தர் ஆளுநருக்கு தொலைபேசி மூலமாக ஆலோசனைகளை வழங்கியதாகவும் விக்னேஸ்வரனுக்கு எதிராக முடிவுகளை எடுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதாகவும் ஊர்ஜிதமற்ற ஓரு தகவல் உண்டு. இத்தகையதோர் பின்னணிக்குள் விக்னேஸ்வரனின் பகைதவிர்ப்பு சமிக்ஞையானது உரிய பலனைக் கொடுத்தது.

ஒரு மாற்று அணியைக் குறித்து அதிகம் எழுதும் நபர்களோடான ஒரு சந்திப்பின் பொழுதே அதற்கு எதிரான கருத்துக்கள் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். அச் சந்திப்பின் போது சட்டத்தரணி கனகேஸ்வரனின் அனுசரணையோடு கொழும்பில் தான் சம்பந்தரை சந்திக்கவிருப்பதாக விக்னேஸ்வரன் தெரிவித்திருந்தார்.

அதன் பின் சில கிழமைகள் கழித்து சம்பந்தர் கிளிநொச்சிக்கு வந்தார். கூட்டமைப்பின் ஐக்கியத்தை வலியுறுத்திப் பேசிய அவர் தமது வழி வரைபடத்தையும் அங்கு வெளிப்படையாக முன் வைத்தார். ஆனால் யாழ்ப்பாணத்திற்கு வராமலேயே திரும்பிச் சென்று விட்டார். கிளிநொச்சி நிகழ்வுகளில் முதலமைச்சர் பங்குபற்றவில்லை. ஆனால் அவருக்கு எதிரான அணியில் நின்றவர்கள் அரங்கில் காணப்பட்டார்கள்.

சம்பந்தர் அந்த இடத்தில் தன்னை ஒரு தலைவராகக் காட்டிக் கொண்டார். விக்கினேஸ்வரனை நோக்கி அவர் இறங்கி வரவில்லை. மாறாக விக்னேஸ்வரனை கொழும்பிற்கு அழைத்து அதாவது தன்னை நோக்கி வரச்செய்து அங்கு வைத்து சந்தித்தார். சந்திப்பின் படி மாகாண சபையை சுமுகமாகக் கொண்டு நடத்துவதற்கு உரிய ஏற்பாடுகள் பற்றி முடிவெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

அச்சந்திப்பில் ஒப்புக்கொண்டபடி கூட்டமைப்பின் தலைவர்கள் யாழ்ப்பாணத்தில் ரெம்பிள் றோட்டில் விக்னேஸ்வரனின் வதிவிடத்தில் சந்தித்தார்கள். அச்சந்திப்பில் சுமந்திரன் பங்குபற்றவில்லை. சந்திப்பின் போது பங்காளிக்கட்சித் தலைவர்களுக்கு இடையிலும் விக்னேஸ்வரனோடும் வாதப்பிரதிவாதங்கள் நடந்திருக்கின்றன. ஆனால் சம்பந்தர் வழமை போல எல்லாவற்றையும் அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்திருக்கிறார். வாக்கு வாதங்களை விக்னேஸ்வரனுக்குச் சாதகமாகக் கட்டுப்படுத்தியுமிருக்கிறார். எனினும் அச்சந்திப்பின் பின்னரும் தமிழரசுக்கட்சியானது விக்னேஸ்வரனோடு முரண்டு பிடித்தது. அதன் பின் கொழும்பில் ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் சம்பந்தர் நிலமைகளைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததாகக் கருதப்படுகிறது.

மேற்படி சந்திப்புக்கள் அனைத்திற்கூடாகவும் ஒரு விடயம் தெளிவாகத் தெரிகிறது. ஒரு கட்சித் தலைவராக சம்பந்தர் தனது பிடியைப் பலமாகப் பேணுகிறார். விக்னேஸ்வரனைப் பகை நிலைக்குத் தள்ளாமல் அவரை எப்பொழுதும் தன்னால் கையாளப்படக் கூடிய ஓர் உறவு நிலைக்குள் வைத்திருக்கவே சம்பந்தர் விரும்புகிறார். அதன் மூலம் ஒரு மாற்று அணியை நோக்கி அவர் போக முடியாதபடி ஓர் உறவை சம்பந்தர் பேண விழைகிறார்.

மாற்று அணியை ஒரு தேர்தல் கூட்டாகவோ அல்லது கட்சிகளின் சங்கமிப்பாகவோ கருதும் தரப்புக்களைப் பொறுத்தவரை இது ஒரு பின்னடைவே. விக்னேஸ்வரனை எதிர்பார்ப்போடு பார்க்கும் சாதாரன சனங்களுக்கு இது ஒரு குழப்பமான சமிக்ஞையைக் கொடுக்கும். ஆனால் ஒரு மாற்று அணி என்பதை அதற்கேயான கோட்பாட்டு அடித்தளத்தில் வைத்து சிந்திக்கும் தரப்புக்களுக்கு இதில் ஆச்சரியப்பட எதுவுமே இல்லை.

அதே சமயம் விக்னேஸ்வரனைப் பொறுத்தவரை அவர் தன்னுடைய பலத்தை இழக்கத் தொடங்குகிறாரா? என்ற கேள்வி இங்கு முக்கியமானது. ஏனெனில் அவர் சம்பந்தரை இப்போதைக்குப் பகைக்க மாட்டார் என்று தெரிகிறது. ஆனால் தமிழரசுக்கட்சி அவரோடு இதயபூர்வமான ஒர் உறவைப் பேணப்போவதுமில்லை. எனவே இதில் விக்னேஸ்வரனின் நிலையானது தனக்குப் பிடிக்காத ஒரு கணவனோடு வாழவும் முடியாத அதே சமயம் பிரிந்து போகவும் முடியாத ஒரு பெண்ணின் நிலையை ஒத்தது என்று வர்ணிக்கலாமா?

இது தொடர்பில் ஒரு பங்காளிக்கட்சித் தலைவர் ஒரு முக்கிய விடயத்தைச் சுட்டிக் காட்டினார். ‘மாகாண சபைகள் சட்டத்தின்படி ஒரு கட்சியானது தனது உறுப்பினரை கட்சியிலிருந்து நீக்கினால் அவர் மாகாணசபைக்குள் வகிக்கும் – அடிப்படை உறுப்பினர் பதவியும் உட்பட – எல்லாப் பதவிகளையும் இழக்க வேண்டியிருக்கும். விக்னேஸ்வரனின் விசயத்தில் தமிழரசுக்கட்சியானது இந்த அஸ்திரத்தைக் கையில் எடுக்கவில்லை. இனிமேலும் கட்சித் தலைமைக்கு கீழ்ப்படிய மறுப்பவர்களுக்கு எதிராக இந்த அஸ்திரத்தை பயன்படுத்த முடியும். அதாவது ஒரு மாற்று அணியைப் பற்றி சிந்திப்பவர்கள் அது தொடர்பில் செயற்படுபவர்கள் மாகாண சபைக்குள் பதவிகளையும், பொறுப்புக்களையும் வகிக்க முடியாது.இது காரணமாகவே விக்னேஸ்வரன் தன்னுடைய பதவிக்காலம் முடியும் வரையிலும் நிலமையை சுமுகமாக்க முற்படுகிறாரா?’ என்றும் அவர் கேள்வி கேட்டார்.

ஆனால் விக்னேஸ்வரன் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் இனிவரும் சிறிய காலகட்டத்திற்கு மாகாண சபையை சுமுகமாகக் கொண்டு நடத்துவது கடினமானதாகவே இருக்கும். சம்பந்தருக்கும் அவருக்குமுள்ள உறவின் அடிப்படையில் அவர் கட்சிக்கு எதிராக செங்குத்தாகத் திரும்பப் போவதில்லை. ஆனால் அவர் எதிராகத் திரும்பினாலும், திரும்பாவிட்டாலும் அவருக்கு எதிரான வியூகம் அகற்றப்படப் போவதுமில்லை. ஏனெனில் அந்த வியூகமானது அவர் அப்பாவித்தனமாக நம்புவது போல நபர்கள் சம்பந்தப்பட்டது அல்ல. அது ஒரு திட்டவட்டமான, தெளிவான நிகழ்ச்சி நிரல்.

இலங்கைத் தீவில் ஆட்சி மாற்றத்தின் பின்னர் ஏற்பட்டு வரும் ஒரு வித ஸ்திர நிலமையை பேண விழையும் உள்நாட்டு, வெளிநாட்டுத் தரப்புக்கள் அனைத்தினதும் நிகழ்ச்சி நிரல் அது. இப்போதுள்ள ஸ்திர நிலமையைத் தொடர்ந்தும் பேணுவதென்றால் தமிழ் மக்கள் கேட்கும் எல்லாவற்றையும் கொடுக்க முடியாது. தமிழ் மக்களுக்கு ஓர் அரைகுறைத் தீர்வையே கொடுக்க முடியும். அப்படியோர் அரைகுறைத் தீர்வைக் கொடுப்பதற்கும் பல தடைகளைத் தாண்ட வேண்டியுள்ளது. யாப்புருவாக்க வழிநடத்தற் குழுவின் இடைக்கால இறுதி அறிக்கை கடந்த 8ம் திகதி முன்வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இப்பொழுது அது மேலும் சில கிழமைகளுக்கு பிற்போடப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறானதோர் பின்னணிக்குள் 13வது திருத்தச்சட்டத்தை பலப்படுத்தும் ஒரு தீர்விற்கே நாடாளுமன்றம் அதாவது சாசனப் பேரவை ஒப்புதலை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படியொரு நிலமை வந்தால் மக்களுக்கு கூட்டமைப்பு வழங்கிய வாக்குறுதிகளை முன்வைத்து நிலமைகளைக் குழப்பத்தக்க ஒரு மாற்று அணி உருவாகுவதை மேற்சொன்ன உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுத் தரப்புக்கள் விரும்பவில்லை.

எனவே ஒரு மாற்று அணிக்குரிய பலமான முதலீடாகக் காணப்படும் விக்னேஸ்வரனை பலவீனப்படுத்தவே மேற்படித் தரப்புக்கள் முயற்சிக்கின்றன. எனவே மாகாண சபைக்குள் விக்னேஸ்வரனுக்கு எதிரான முற்றுகை எனப்படுவது நபர்கள் சம்பந்தப்பட்டது அல்ல. அது ஒரு தெளிவான நிகழ்ச்சி நிரல். அதன்படி இனிமேலும் காய்கள் நகர்த்தப்படும்.

இவ்வாறானதோர் பின்னணிக்குள் விக்னேஸ்வரன் சம்பந்தருக்கும், தமிழரசுக்கட்சிக்கும் இடையே கிழிபடுவாராக இருந்தால் ஒரு கட்டத்தில் களைத்துப் போய் நோயாளியாகி விடுவார். அவரை அரசியல் ரீதியாகக் கவிழ்த்தால் அவர் தியாகியாகி மாற்று அணிக்குள் போய் விடுவார் என்று அஞ்சும் தரப்புக்கள் அவரை நோயாளியாக்கி அவராக ஓய்வு பெறும் ஒரு நிலைக்குத் தள்ளும் ஒரு தெரிவைக் கையில் எடுக்கக்கூடும். மாகாண சபைக்குள் ஒரு நீதிமன்றத்தை நடத்தியே தீருவேன் என்று விக்னேஸ்வரன் பிடிவாதமாக நிற்பது அவர்களுக்கு அனுகூலமானது.

வழமையான ஒரு நீதிமன்றத்தில் ஒரு நீதிபதிக்குக் கிடைக்கும் மதிப்பும், அதிகாரமும் ஒரு மக்கள் மன்றத்தில் கிடைக்கப்போவதில்;லை. மாகாணசபையை ஒரு நீதிமன்றமாக மாற்ற முடியாது. ஏனெனில் வழமையான நீதிமன்றங்களில் நீதிபதி வழங்கியதே தீர்ப்பு. அதற்கெதிராக மேன்முறையீடு செய்யலாம். ஆனால் விசாரணைகளின் போதோ அல்லது தீர்ப்பு வழங்கப்படும் போதோ நீதிபதியை நோக்கி கேள்வி கேட்க முடியாது. குறிப்பாக குற்றஞ்சாட்டப்பட்டவர் அவ்வாறு செய்ய முடியாது. அது நீதிமன்றத்தை அவமதிப்பதாகக் கருதப்படும். ஆனால் மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட மாகாண சபைக்குள் நிலமை அப்படியல்ல. அங்கே முதலமைச்சர் ஒரு நீதிபதியைப் போல நடந்து கொள்ள முடியாது.

ஒரு நீதிபதி எதிர்பார்க்கும் மதிப்பையும், மரியாதையையும் அங்கே எதிர்பார்க்க முடியாது. இதற்கு ஆகப்பிந்திய உதாரணம் அமைச்சர் டெனீஸ்வரனின் அறிக்கையாகும். ‘அவர் ஒரு நீதியரசர் என்றால் நான் ஒரு சட்டத்தரணி. என்னைப் பதவியில் இருந்து நீக்கினால் என்ன செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரியும்’ என்று டெனீஸ்வரன் அறிக்கை விட்டுள்ளார்.

இவ்வாறாக மாகாண சபைக்குள் அவமதிப்புக்கும், நெருக்கடிக்கும் உள்ளாகும் பொழுது விக்கினேஸ்வரன் என்ன செய்வார்? ஒரு நீதிபதியாக செயற்பட்டு முடிவில் ஒரு நோயாளியாக மாறுவாரா? அல்லது ஒரு தலைவராகச் செயற்பட்டுத் தேறி மேலெழுவாரா?

அவருடைய பலம் எதுவென்று அவர் நம்புகிறார்? தன்னுடைய நீதிதான் தன்னுடைய பலம் என்று அவர் நினைக்கிறாரா? இல்லை. அது ஒரு முழு உண்மையல்ல. அது ஒரு பகுதி உண்மையே. ஒரு நீதிபதி என்ற அங்கீகாரம் தான் அரசியலில் அவருடைய முதலீடு. மாகாண சபைக்குள் நீதியை நிலைநாட்டியதே அவருக்குக் கிடைத்த மக்கள் ஆதரவிற்குக் காரணம். ஆனால் இப்பொழுது அவருடைய பலம் அவருக்குள்ள மக்கள் ஆதரவுதான்.கட்சியல்ல. நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் போது தமிழரசுக்கட்சியானது கட்சிசார் நடவடிக்கைகளை எடுக்காமைக்கும் அதுவே காரணம். கட்சித் தலைமையானது அவரை அனுசரித்துப் போனமைக்கும் அதுவே காரணம். எனவே வெகுசன ஆதரவுத்தளம் தான் இப்பொழுது விக்னேஸ்வரனின் பிரதான தளம். ஒரு தலைவராகச் செயற்பட்டு அந்த ஆதரவுத்தளத்தை மேலும் பெருக்கிக் கொண்டால் அவருடைய அரசியல்ப் பயணம் ஏறுதிசையில் செல்லும். தன்னை நம்பியிருக்கும் மக்களுக்கு தெளிவான சமிக்ஞைகளை வழங்குவது ஒரு தலைவரின் பிரதான பண்பு ஆகும். வழுவழுத்த தலைவர்களையும் இரண்டாகக் கிழிந்து நிற்கும் தலைவர்களையும் சாதாரன சனங்கள் பிரமிப்போடு பார்ப்பதில்லை. ஒரு தலைவராக மேலெழுவதா? அல்லது ஒரு நோயாளியாக ஓய்வு பெறுவதா? என்பதை அவர்தான் முடிவெடுக்க வேண்டும். சில சமயங்களில் அவருடைய எதிரிகளும் முடிவெடுப்பதுண்டு. ஒரு நோயாளியாக அவர் ஓய்வு பெறுவாராக இருந்தால் ஒரு சிவில் சமூகச் செயற்பாட்டாளர் குறிப்பிட்டிருந்தது போல் தமிழ் மக்கள் எதிர்காலத்தில் அவருக்கு சிலை வைக்கும் பொழுது ஒரு கையில் கத்தரிக்கோலையும், சிவப்பு நாடாவையும் இன்னொரு கையில் தீர்மானங்களின் நகல்களையும் ஏந்திநிற்கும் ஒரு சிலையைத்தான் வைக்க வேண்டி வருமா?

விக்னேஸ்வரனின் அரசியல் ஏறு திசையில் செல்வது தமிழ் மக்களுக்கு நல்லது. ஒரு மாற்று அணிக்கு நல்லது. அவர் அதற்குத் தயாரில்லை என்றால் அதுவும் ஒரு விதத்தில் நல்லதுதான். முள்ளிவாய்க்காலுக்குப் பின் தமிழ் மக்களுக்குக் கிடைத்த ஆகப்பிந்திய பாடமாக அது அமையும். விக்னேஸ்வரன் கவிழப்போகிறார் என்ற எதிர்பார்ப்புத் தோன்றிய பொழுது தமிழ் மக்கள் பேரவையும் உட்பட அவரை ஆதரித்த பலரும் அவரை எப்படிக் காப்பாற்றுவது என்றே சிந்தித்தார்கள். இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்றின் போது நான் பின்வருமாறு சொன்னேன். ‘அவர் கவிழ்ந்தால் என்ன நடக்கும்? தமிழ் எதிர்ப்பு அரசியலானது ஒரு பின்னடைவை எதிர் கொள்ளும். ஆனால் அதுவும் ஒரு பாடமாக அமையும். உடனடிக்கு அது ஓரிழப்புத்தான். பின்னடைவுதான். ஆனால் நந்திக்கடற்கரையில் தமிழ் மக்கள் இழந்தவற்றோடு ஒப்பிடுகையில் அது ஒரு மீண்டெழ முடியாத இழப்பேயல்ல. ஓர் ஊழிப் பேரழிவை கடந்து வந்த மக்களுக்கு இனி எதுவுமே இழப்பல்ல. எதுவுமே தோல்வியுமல்ல. எல்லாமே பாடங்கள்தான்’.

Leave a comment