ஜெயலலிதாவின் உடலை பிரேத பரிசோதனை செய்யக்கோரி வழக்கு – ஐகோர்ட்டில் விசாரணை தள்ளிவைப்பு

288 0

ஜெயலலிதாவின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை அக்டோபர் மாதத்துக்கு ஐகோர்ட்டு தள்ளிவைத்தது.

சென்னை அயனாவரத்தை சேர்ந்த மியாஜான் (வயது 77) என்பவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-

தமிழக முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா, உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி டிசம்பர் 5-ந் தேதி மரண மடைந்தார். அவருக்கு வெளிநாட்டில் இருந்தும், டெல்லியில் இருந்தும் வந்த டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.

ஆனால் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை அனைத்துமே மர்மமான முறையில் இருந்தது. வெளிப் படைத்தன்மை சிறிதும் இல்லை. அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிப்பதற்கு முதல்நாள், மெட்ரோ ரெயில் சேவையை தொடங்கிவைக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது அவர் நல்ல உடல்நிலையில் தான் இருந்தார்.

ஜெயலலிதாவின் சொத்து விவரங்கள் அனைத்தும் சசிகலாவுக்கு தான் தெரியும். அதனால், ஜெயலலிதாவின் சாவில் பல மர்மங்கள் உள்ளன. அவரது உடலை ஆஸ்பத்திரி நிர்வாகம் ஒப்படைக்கும்போது, உடலில் பல ஊசிகள் போட்டதற்கான தடங்கள் இருந்தன.

எனவே, ஜெயலலிதாவின் உடலை தோண்டி எடுத்து, முன் னணி டாக்டர்களை கொண்டு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று மத்திய உள்துறை செயலாளருக்கு உத்தரவிட வேண்டும். ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரை நியமிக்கவும், மத்திய உள்துறை செயலாளருக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. இதே கோரிக்கையுடன் ஏற்கனவே 3 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு, அந்த வழக்குகள் அக்டோபர் 23-ந் தேதி விசாரணைக்கு வருகிறது. அந்த வழக்குகளுடன், இந்த வழக்கும் சேர்த்து விசாரிக்கப்படும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Leave a comment