ஓ.பி.எஸ்ஸூம் ஈ.பி.எஸ்ஸூம் இன்று மோடியை சந்திக்கின்றனர் 

202 0
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் நிலவிய முரண்பாடுகள் தீர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கும், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தரப்புக்கும் இடையில் நீண்டகாலமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இரண்டு தரப்பையும் ஒன்றிணைக்கும் நோக்கில் இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தைகளில் தற்போது இணக்கப்பாடு காணப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இரண்டு பிரிவுகளின் தலைவர்களும் எதிர்வரும் 15ஆம் திகதி நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதேநேரம் இன்றைய தினம் இரண்டு பேரும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவிருப்பதாக இந்தியாவின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
புதிய இணக்கப்பாட்டின்படி மீண்டும் முதலமைச்சராக பன்னீர்செல்வம் பதவி ஏற்க வாய்ப்புகள் இருப்பதாகவும் எதிர்பார்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராமின் மரணத்தை அடுத்து, பன்னீர்செல்வம் தற்காலிகமாக முதலமைச்சராக பதவி ஏற்றதுடன், முதலமைச்சர் பதவியை பெற்றுக் கொள்வதற்கான முனைப்புகளை ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த சசிக்கலா மேற்கொண்டார்.
இதன்படி சசிக்கலா வழங்கிய அழுத்தம் காரணமாக தாம் முதலமைச்சர் பதவியில் இருந்து விலக நேர்ந்ததாக அறிவித்த பன்னீர்செல்வம், மீண்டும் அந்த பதவியைப் பெற்றுக் கொள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.
இதற்கிடையில் சொத்துக்குவிப்பு வழக்கில் மீண்டும் குற்றவாளி என்று உறுதி செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதன் பின்னர், எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக நியமிக்கப்பட்டார்.
இதன்போது ஏற்பட்ட பல்வேறு முறுகல்நிலைகள் தற்போது தீர்க்கப்பட்டுள்ளதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a comment