அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களுக்கும் கூட்டமைப்பிற்கும் சந்திப்பு!

247 0

இலங்கை வந்துள்ள ஐக்கிய அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், யாழ். மாவட்டப் பாராளுமன்ற சுமந்திரனுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று காலை கொழும்பில் இடம்பெற்றது. 

இச் சந்திப்பில் காங்கிரஸ் உறுப்பினர்களான றொட்னி பிறீலிங்குசன், ஹென்றி கியூலர், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கேசாப் மற்றும் உயர் ஸ்தானிகராலய அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர் என, இது குறித்து கூட்டமைப்பு வௌியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் தொடர்பில் இதன்போது தெளிவுபடுத்திய இரா.சம்பந்தன், ஐ.தே.க. மற்றும் ஸ்ரீ.ல.சு.க. என்பனவற்றின் உறுப்பினர்கள் நாட்டின் நலனைக் கருத்திற் கொள்ளாது தமது அரசியல் எதிர்காலத்தை முன்வைத்துச் செயற்படுவதன் நிமித்தம் இந்த விடயம் தொடர்பில் தேவையற்ற ஓர் இழுத்தடிப்பு நிலவுவதாகத் தெரிவித்தார்.

மேலும், புதிய அரசியல் யாப்பானது பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவதோடு மாத்திரமல்லாமல், அது சர்வசன வாக்கெடுப்பு ஒன்றின் மூலம் மக்களால் அங்கீகரிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார். இந்தப் பொன்னான தருணத்தை நாம் தவறவிடக் கூடாது எனக் குறிப்பிட்ட, இரா.சம்பந்தன், நான் தமிழ் மக்களின் நன்மைக்காக மாத்திரம் இதைக் கூறவில்லை, மாறாக இலங்கைவாழ் அனைத்து மக்களின் நன்மைக்காகவும் இதனைத் தெரிவிக்கிறேன் எனக் கூறினார் என, அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கை

Leave a comment