வெங்கையாநாயுடு பதவி ஏற்பு: எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி பயணம்

218 0

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பதவி ஏற்பு விழாவில் பங்கேற்பதற்காக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி செல்கிறார்.

துணை ஜனாதிபதியாக உள்ள ஹமீத் அன்சாரியின் பதவிக்காலம் வருகிற 10-ந் தேதியுடன் முடிவடைகிறது.இதைத் தொடர்ந்து புதிய துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க கடந்த 5-ந் தேதி தேர்தல் நடந்தது.

இதில் பாரதீய ஜனதா சார்பில் மத்திய அமைச்சராக இருந்த வெங்கையா நாயுடு வேட்பாளராக நிறுத்தப்பட்டார். காங்கிரஸ் உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகளின் சார்பில் மகாத்மா காந்தியின் பேரனும், மேற்கு வங்காள முன்னாள் கவர்னருமான கோபாலகிருஷ்ணகாந்தி நிறுத்தப்பட்டார்.

இதற்கான தேர்தலில் பாராளுமன்ற மற்றும் டெல்லி மேல்-சபை எம்.பி.க்கள் வாக்களித்தனர். அ.தி.மு.க.வின் இரு அணிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் அனைவரும் வெங்கையா நாயுடுவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.இதில் வெங்கையாநாயுடு 516 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். கோபாலகிருஷ்ண காந்திக்கு 244 வாக்குகள் கிடைத்தது.

இதையொட்டி நாட்டின் 13-வது துணை ஜனாதிபதியாக வெங்கையா நாயுடு நாளை மறுநாள் (11-ந்தேதி) பதவி ஏற்க உள்ளார். அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய மந்திரிகள், மாநில முதல்- அமைச்சர்கள், கட்சித் தலைவர்கள், எம்.பி.க்கள் பங்கேற்க உள்ளனர்.

இந்த பதவி ஏற்பு விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்க உள்ளார்.இதற்காக அவர் நாளை மாலை டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

பதவி ஏற்பு விழாவில் பங்கேற்ற பின்னர் பிரதமர் மோடியை சந்திக்க அவர் திட்டமிட்டுள்ளார். அப்போது தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மீண்டும் அழுத்தம் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் விவசாயிகள் பிரச்சினை தொடர்பாகவும் அவர் பிரதமரிடம் பேசுவார் என தெரிகிறது.

Leave a comment