ராம்குமாரை வீடியோ எடுக்க காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் அனுமதி

268 0

201608111142175126_high-court-allowed-police-to-take-video-of-ramkumar_SECVPFசுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாரை வீடியோ படம் எடுத்து, ஏற்கனவே உள்ள வீடியோ பதிவுடன் ஒப்பிட்டு பார்க்க உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் சுவாதி என்ற இளம்பெண் பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டார். மாநிலத்தையே உலுக்கிய இந்த கொலை தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், சி.சி.டி.வி. ஆதாரத்தை வைத்து துப்பு துலக்கி, ராம்குமார் என்ற வாலிபரை கைது செய்தனர். கொலை செய்ததாக அவரும் வாக்குமூலம் அளித்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதற்கு வலுசேர்க்கும் வகையில் சாட்சியங்களிடம் வாக்குமுலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், ராம்குமாரை வீடியோ எடுத்து, முந்தைய சி.சி.டி.வி. பதிவுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு காவல்துறைக்கு எழும்பூர் நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதனை எதிர்த்து ராம்குமார் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், ராம்குமாரை வீடியோ எடுக்க அனுமதி அளித்ததுடன், எழும்பூர் நீதிமன்றம் பிறப்பித்த சில நிபந்தனைகளை ரத்து செய்தது.

“ராம்குமாரை வீடியோ, புகைப்படம் மற்றும் உடல் தொடர்பான அளவீடுகள் எடுப்பதற்கு, தேவையான ஏற்பாடுகளை புழல் சிறை-2 கண்காணிப்பாளர் செய்து தரவேண்டும். போலீஸ் புகைப்பட பிரிவில் துணை ஆய்வாளர் தகுதிக்கு குறையாத நபர் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க வேண்டும். வீடியோ உள்ளிட்டவற்றை எடுத்தவுடன் அவற்றை எழும்பூர் நீதிமனறத்திற்கு அனுப்ப வேண்டும். பின்னர் அடுத்தகட்ட ஆய்வுக்காக தடயவியல் துறைக்கும் அனுப்ப வேண்டும்” என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.