ஊழல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள உலகப் புகழ்பெற்ற சாம்சங் நிறுவனத்தின் அடுத்த வாரிசுதாரருக்கு 12 ஆண்டுகள் ஜெயில் தண்டனை வழங்க வேண்டுமென தென்கொரிய வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.
தென் கொரியாவில் அதிபராக இருந்த பார்க் ஜியுன் ஹை ஊழல் குற்றச்சாட்டினால் பதவி இழந்தார். அவருக்கு சுமார் ரூ.250 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக சாம்சங் நிறுவன துணை தலைவர் லீ ஜே-யங் (48) மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து அவர் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு, தென் கொரிய நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை தற்போது நடைபெறுகிறது. இந்த விசாரணையின் போது அரசு தரப்பில் வாதாடிய வழக்கறிஞர்கள், லீ ஜே-யங் மீது பலத்த குற்றச்சாட்டுகளை தொடுத்தனர்.
‘லீ ஜே-யங்கின் ஊழல் காரணமாக முன்னாள் அதிபர் பதவி இழக்கும் நிலை ஏற்பட்டது. அவர் தனது பணபலத்தை தவறான காரியங்களுக்கு பயன்படுத்தியுள்ளார். எனவே அவருக்கு 12 ஆண்டுகள் வரையும் மற்ற மூன்று பேருக்கு 8 ஆண்டுகள் வரையும் சிறைதண்டனை வழங்க வேண்டும்’ என வாதிட்டனர்.
ஆனால் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள லீ ஜே-யங் சாம்சங் நிறுவனத்தில் எடுக்கப்படும் முடிவுகளை தான் தனிப்பட்டு எடுப்பதில்லை எனவும் மற்ற அதிகாரிகளின் ஆலோசனைகளையே அதிகமாக எடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவருக்கு அதிகபட்சமாக 12 ஆண்டு சிறைதண்டனை வழங்கப்பட வாய்ப்புள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு இந்த மாத இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

