மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் வீடு வீடாக மக்களை சந்திக்கிறார்கள்

228 0

மத்திய- மாநில அரசுகளை கண்டித்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் வீடு வீடாக சென்று மக்களை சந்திக்கிறார்கள். இதுதொடர்பாக 10 ஆயிரம் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில குழு கூட்டம் சென்னையில் நடந்தது.

கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்த்து ஆகஸ்டு 18-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை தமிழகம் முழுவதும் கிராமங்கள் முதல் பெருநகரங்கள் வரை வீடு வீடாகச் சென்று மக்கள் சந்திப்பு இயக்கத்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் உள்பட அனைவரும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழுக்களாகச் சென்று இவ்வியக்கத்தை வெற்றிகரமாக நடத்திட வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது.

பெட்ரோல் டீசல் விலையை அன்றாடம் தீர்மானிப்பது, சமையல் எரிவாயுக்கான மானியங் களை வெட்டி குறைப்பது, மண்எண்ணை மானியத்தை குறைப்பது, அனைத்துக்கும் மேலாக ஜி.எஸ்.டி.யை திணித்து அனைத்து பகுதி மக்களது வாழ்வாதாரத்தையும் பறித்துள்ளதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.விவசாய விளை பொருட்களுக்கு அடக்க விலையோடு 50 சதமானம் சேர்த்து விலை தீர்மானிக்க வேண்டும், இந்த விலை விவசாயிகளுக்கு கிடைப்பதை உறுதி செய்வதற்கு குறைந்தபட்ச ஆதார விலை சட்டத்தினை மத்திய அரசு நிறைவேற்றிட வேண்டும், விவசாயிகளது கடனை தள்ளுபடி செய்திட வேண்டும், ஜி.எஸ்.டி மூலம் உயர்த்தப்பட்ட வரிவிதிப்புகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

Leave a comment