காஷ்மீர் என்கவுண்ட்டரில் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தின் முக்கிய தளபதி அபு துஜானா சுட்டுக் கொலை

325 0

காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்ட்டரில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்தின் முக்கிய தளபதி அபு துஜானா உள்ளிட்ட 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கம் இளைஞர்களை ஏமாற்றி, பயிற்சி கொடுத்து இந்தியாவில் நாசவேலை செய்ய அனுப்பி வைத்தபடி உள்ளது.

மேலும் காஷ்மீரில் கலவரம் செய்யவும், நாசவேலைகளில் ஈடுபடவும் அந்த இயக்கம் காஷ்மீரில் நிறைய ஆதரவாளர்களை கோடிக்கணக்கில் பணம் கொடுத்து உருவாக்கி வைத்துள்ளது.

காஷ்மீரில் உள்ள லஷ்கர்- இ-தொய்பா கமாண்டர்களில் மூத்த தளபதி போல செயல்பட்டு வந்தவன் அபு துஜானா. இவன் காஷ்மீரில் புல்லாமா மாவட்டத்தில் உள்ள ஹக்ரிபோரா என்ற இடத்தில் ஒரு வீட்டில் பதுங்கி இருப்பதாக உளவுத்துறையிடம் இருந்து தகவல் வந்தது.

இதையடுத்து பாதுகாப்புப் படை வீரர்கள் அந்த ஊரை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டை நடத்தினார்கள். அப்போது ஒரு வீட்டுக்குள் அபு துஜானாவுடன் 3 தீவிரவாதிகள் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. அவர்களை உயிருடன் பிடிக்க பாதுகாப்புப்படையினர் தீவிர முயற்சி செய்தனர். அதில் வெற்றி கிடைக்கவில்லை.

இதையடுத்து பாதுகாப்புப் படை வீரர்களுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் முக்கிய தளபதியான அபு துஜானா உள்ளிட்ட 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

மேலும் ஒன்று அல்லது இரண்டு தீவிரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்ற கூறப்படுகிறது. இதனால் அவர்களை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

அபு துஜானா சுட்டு வீழ்த்தப்பட்டிருப்பது காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கு மிகப்பெரிய வெற்றியாகக் கருதப்படுகிறது. கடந்த 2010-ம் ஆண்டு ஆக்கிரமிப்பு காஷ்மீரில் குவிந்து காஷ்மீருக்குள் ஊடுருவிய அவன் லஷ்கர் அமைப்பை தீவிரப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டான்.

அபு துஜானா கடந்த 7 ஆண்டுகளாக பல்வேறு கலவர சம்பவங்களை தூண்டிவிட்டு நடத்தி வந்தான். இதையடுத்து அவனது தலைக்கு போலீசார் ரூ.10 லட்சம் பரிசு அறிவித்திருந்தனர். இதுவரை 5 முறைக்கு மேல் பாதுகாப்பு படையினரின் தாக்குதலில் இருந்து அபு துஜானா தப்பித்துள்ளான். பாகிஸ்தானின் வடக்கு பகுதியில் நீண்ட நாட்களாக பதுங்கி இருந்ததாக கூறப்படுகிறது.

காஷ்மீரில் பாதுகாப்பு படை வீரர்கள் மீது வாலிபர்களை தூண்டி விட்டு கல் வீசச் செய்ததில் இவனுக்கு முக்கிய பங்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment