அப்துல்கலாம் நினைவிடத்தில் குரான், பைபிள் புத்தகங்களை மாற்றி வைத்தது ஏன்?: மத்திய உளவுத்துறை விசாரணை

1641 0

மறைந்த ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவிடத்தில் குரான், பைபிள் புத்தகங்களை மாற்றி வைக்கப்பட்டது குறித்து மத்திய உளவுத்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமேஸ்வரம் பேய்க் கரும்பில் மறைந்த ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. இந்த மண்டபத்தை கடந்த 27-ந்தேதி பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

இந்த மண்டபத்தில் அப்துல்கலாம் வீணை வாசிப்பது போன்ற உருவசிலை நிறுவப்பட்டுள்ளது. அதன் அருகே அவர் விரும்பி படிக்கும் புனித நூலான பகவத் கீதை வைக்கப்பட்டிருந்தது. இதை ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ விமர்சித்தார்.

பகவத் கீதையை மட்டும் வைத்ததன் உள் நோக்கம் என்ன? திருக்குறளை விட பகவத் கீதை உயர்வானதா? என்று எதிர்ப்பு தெரிவித்தார். அவர் எழுப்பிய சர்ச்சை பரபரப்பை உருவாக்கியது.

இதையடுத்து கலாமின் பேரன் சலீம் நேற்று நினைவிடத்துக்கு சென்று பைபிள், திருக்குரான் ஆகிய புனித நூல்களையும் வைத்தார். அப்போது எங்கள் தாத்தா எல்லோருக்கும் பொதுவானவர். யாரும் இதை அரசியல் ஆக்க வேண்டாம் என்று பேட்டி அளித்தார்.

இதற்கிடையில் மீண்டும் பைபிளும், குரானும் அங்கிருந்து மாற்றப்பட்டு கண்ணாடி பேழையில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இது மீண்டும் சர்ச்சையாகி இருக்கிறது.

அந்த இரு புனித நூல்களையும் மாற்றி கண்ணாடி பேழையில் வைத்தது ஏன்? மாற்றி வைத்தது யார்? என்று உளவுத்துறை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

இதுபற்றி பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் கூறும்போது, இது ஒரு சர்ச்சையாக இருப்பதால் புனித நூல்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டு மிகப்பெரிய பிரச்சினை வந்துவிட கூடாது என்ற பயத்தில்தான் மாற்றி வைக்கப்பட்டுள்ளது. உயர் அதிகாரிகள் உத்தரவை பொறுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

Leave a comment