இரோம் சர்மிளா திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தவரிடம் விசாரணை

328 0

இரோம் சர்மிளா திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தவரிடம் சார்பதிவாளர் விசாரணை நடத்தினார்.

மணிப்பூர் மாநிலத்தில் ஆயுத சட்டத்தை எதிர்த்து பல ஆண்டுகளாக பட்டினி போராட்டம் நடத்தியவர் இரோம் சர்மிளா. பின்னர் தனது போராட்டத்தை முடித்துக் கொண்டு கடந்த முறை நடந்த அம்மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் அவருக்கு குறைந்த வாக்குகளே கிடைத்தது. இதனால் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கொடைக்கானல் வந்தார்.

தனது காதலரான லண்டனைச் சேர்ந்த தேஸ்மன் கொட்டின்கோவை திருமணம் செய்ய முடிவு செய்தார். இருவரும் கொடைக்கானல் சார்பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பம் அளித்தனர்.

இரோம் சர்மிளா திருமணத்துக்கு பிறகு கொடைக்கானலில் தங்கி இங்குள்ள பழங்குடியின மக்களுக்கு ஆதரவாக போராடுவேன் என கூறினார். இதனால் இவர்கள் திருமணத்துக்கு அனுமதிக்க கூடாது என்று கொடைக்கானல் பேத்துப்பாறையைச் சேர்ந்த மகேந்திரன் எதிர்ப்பு தெரிவித்து சார்பதிவாளர் ராஜேசிடம் மனு அளித்தார்.

மனுவை பெற்றுக் கொண்ட அவர் இதற்கான ஆதாரங்களை தெரிவிக்க வேண்டும் என கூறியிருந்தார். அதன்படி சார்பதிவாளர் ராஜேஸ் முன் மகேந்திரன் ஆஜராகி விளக்கமளித்தார்.

இரோம் சர்மிளா அவரது காதலரை திருமணம் செய்து இங்கேயே தங்கினால் சுற்றுலா நகரான கொடைக்கானல் போராட்ட களமாக மாறிவிடும் என கூறினார். அதற்கான ஆதாரங்களையும் சார்பதிவாளரிடம் அளித்தார்.அதனை பெற்றுக் கொண்ட சார் பதிவாளர் மனு மீதான விசாரணை முடிவுக்கு வந்த பின் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு இறுதி ஆணை வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

Leave a comment