சீனா: புல்லட் ரெயில்களை மணிக்கு 350 கி.மீ. வேகத்தில் இயக்க சீன அரசு திட்டம்

406 0

சீனாவில் இயக்கப்பட்டுவரும் புல்லட் ரெயில்களை மணிக்கு 350 கி.மீ. வேகத்தில் இயக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளதாக சீன ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

சீனா உலகின் மிகபெரிய மற்றும் அதிவேக ரெயில்சேவை அளித்து வரும் நாடாகும். சீனாவில் உள்ள 31 மாகாணங்களில் 29 மாகாணங்களில் அதிவேக ரெயில்சேவை அளிக்கப்பட்டுவருகிறது. அந்நாட்டு ரெயில்சேவைகள், உள்ளூர் விமான சேவையுடன் போட்டியிடும் அளவிற்கு வேகமானதாகும். சீனாவின் புல்லட் ரெயில்கள் மணிக்கு சுமார் 350 கி.மீ. வேகம் வரை செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டு இயக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில், கடந்த 2011ம் ஆண்டு கிழக்கு ஜேஜியாங் பகுதியில் நிகழ்ந்த ஒரு ரெயில் விபத்தில் 30க்கும் அதிகமானோர் மரணமடைந்தனர். இந்த விபத்திற்கு ரெயில் அதிக வேகத்தில் இயக்கப்படுவதே காரணம் என கண்டறிப்பட்டதையடுத்து ரெயிலின் வேகத்தை மணிக்கு 300 கி.மீ.யாக சீனா அரசு குறைத்தது.
இந்த நிலையில், புல்லட் ரெயில்களின் வேகத்தை மறுபடியும் மணிக்கு 350 கி.மீ.யாக அதிகரிக்க சீன அரசு திட்டமிட்டுள்ளதாக சீன ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. பீஜிங் – சாங்காய் இடையே இயக்கப்படும் ரெயில்களின் வேகத்தை வருகிற செப்டம்பர் மாதம் முதல் மணிக்கு 350 கி.மீ. வேகத்தில் இயக்க சீன அரசு திட்டமிட்டுள்ளதாகவும், இதன்மூலம் தற்போதைய பயணநேரமான 6 மணி நேரம் என்பது நான்கரை மணி நேரமாக குறையும் எனவும் அந்த ஊடகம் வெளியிட்ட செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட புல்லட் ரெயில்கள் மணிக்கு 400 கி.மீ. வேகம் வரை செல்லக்கூடியது. அந்த ரெயில்களையே இத்திட்டத்திற்கு பயன்படுத்தப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Leave a comment