பிளாக்மெயில் செய்யவே பால் நிறுவனங்கள் வழக்கு போட்டுள்ளது: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

252 0

தன்னை பிளாக்மெயில் செய்யவே பால் நிறுவனங்கள் நீதிமன்றத்தில் வழக்கு போட்டுள்ளதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

தனியார் பால் நிறுவனங்கள் சில பாலில் கலப்படம் செய்வதாக பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிரடியாக குற்றச்சாட்டுக்களை தெரிவித்து வந்தார். இது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, அமைச்சரின் இந்தக் குற்றச்சாட்டை எதிர்த்து தனியார் நிறுவனங்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், “அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனியார் பால் நிறுவனங்கள் மீது ஆதாரம் இல்லாமல் கலப்படம் குறித்து பேசக்கூடாது” என்று தடை விதித்தது.

மேலும், பால் கலப்பட விவகாரத்தில் உண்மை இருக்கும் பட்சத்தில் அது குறித்து பேசலாம். ஆனால், ஆதாரம் இல்லாமல் பேசினால் அது மக்களிடம் அச்சத்தை உண்டாக்கும் என்று தெரிவித்தது.

இந்நிலையில் 3 தனியார் பால் நிறுவனங்கள் தமக்கு எதிராக தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், தன்னை பிளாக்மெயில் செய்யவும், அவர்கள் மீதான குற்றச்சாட்டில் இருந்து தப்பிக்கவும் பால் நிறுவனங்கள் நீதிமன்றத்தில் வழக்கு போட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Leave a comment