காணாமல் போனோர் அலுவலகம் குறித்த போலியான அச்சம் ஏற்படுத்தப்படக்கூடாது – எஸ்.பி. திஸாநாயக்க

294 0

இலங்கையில் இடம்பெற்ற யுத்த கால கட்டத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பான பிரச்சினை இன்றும் தொடர்ந்த வண்ணமுள்ளது.

இந்த நிலையில் இலங்கை அரசாங்கம் காணாமல் போனோர் தொடர்பான அலுவலக சட்டமூலத்திற்கு அனுமதி அளித்தது.

அதனைத் தொடர்ந்தும் அந்நாட்டின் எதிர்கட்சிகள் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.

இதனிடையே காணாமல் போனோர் அலுவலகம் குறித்த போலியான அச்சம் ஏற்படுத்தப்படக்கூடாது என்று அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.

இந்த அலுவலகமானது காணாமல் போனோவர்களை தேடி கண்டுபிடிக்கவும், அவர்கள் காணாமல் போனமைக்கான காரணங்களை அறியவும், அவர்களது உறவினர்கள் யதார்த்த ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் முகம் கொடுத்துள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கவுமே உருவாக்கப்படுகிறது.

அதேநேரம் இந்த செயற்பாடுகளின் போது குற்றவாளிகளுக்கு எதிரான ஆதாரங்கள் கிடைக்கும் பட்சத்தில், பலவந்தமாக காணாமல் போதலுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க யாருக்கும் உரிமை உண்டு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தம் நிறைவடைந்தப் பின்னர் காணாமல் போனோர் தொடர்பில் சர்வதேச அளவில் செயற்படும் பல மனித உரிமை அமைப்புகள் கேள்வி எழுப்பி வருகின்றன.

இந்தநிலையில் இராணுவத்தின் கௌரவத்தை பாதுகாக்கும் நோக்கிலேயே இந்த அலுவலகம் உருவாக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக காணாமல் போயுள்ள 5 ஆயிரத்து 101 இராணுவத்தினர் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Leave a comment