வித்தியா கொலை வழக்கின் சந்தேகநபர்களின் இரத்த மாதிரிகள் ஒத்துவரவில்லை

454 0
யாழ்ப்பாணம், புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் சந்தேகநபர்களின் இரத்த மாதிரிகள் டிஎன்ஏ பரிசோதனையில் ஒத்துவரவில்லை என சிரேஸ்ட்ட அரசாங்க உதவி இராசாயன பகுப்பாய்வாளர் வனிதா ஜெயவதி பண்டாரநாயக்க நீதிமன்றில் சாட்சியம் அளித்துள்ளார்.
வித்தியா கொலை வழக்கு ட்ரயல் அட்பார் தீர்ப்பாய முறையில் மூன்று மேல் நீதிமன்ற நீதிபதிகள் ஆகிய சசி மகேந்திரன், அன்னலிங்கம் பிறேம் சங்கர் மற்றும் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் நடைபெற்றுவருகிறது.
சந்தேப நபர்களின் இரத்த மாதிரிகள், விந்துக்கள் ஆகிய தடையப் பொருட்கள் கொலை செய்யப்பட்ட வித்தியாவின் தடையப்பொருட்களுடன் ஒத்துவரவில்லை என தெரிவித்த அரசாங்க உதவி இராசாயன பகுப்பாய்வாளர், பெறப்பட்ட உரோமம் அல்லது மயிரை அடையாளப்படுத்துவதற்கு அல்லது உறுதிப்படுத்துவதற்கு வசதிகள் தம்மிடம் இல்லை என்றும் தெரிவித்தார்.
52ஆவது சாட்சியமாக சாட்சியளித்த அரசாங்க உதவி இரசாயன பகுப்பாய்வாளர், தடயப் பொருட்களாக பகுப்பாய்விற்காக 36 சான்றுப்பொருட்கள் மற்றும் இரத்த மாதிரிகள் கிடைத்ததாகவும் இவற்றில் எவையும் கொலைசெய்யப்பட்ட வித்தியாவின் சான்றுப்பொருட்களுடன் பொருந்தவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தடயப்பொருளாக கிடைக்கப்பெற்ற நீளக்காற்சட்டையில் காணப்பட்ட இரத்தக்கறையும் வித்தியாவின் இரத்த மாதிரியுடன் பொருந்தவில்லை என்று குறிப்பிட்ட அவர் மன்றில் வித்தியா பாடசாலைக்கு அணிந்து சென்ற வெள்ளைநிற சீருடையையும் அடையாளம் காட்டினார்.
இன்றைய சாட்சியத்தில் முதலாவதாக ஊர்காவற்துறை நீதிமன்ற நீதவான் அப்துல் மொஹமட் றியால் யூட் சாட்சியமளித்தார். அதனை தொடர்ந்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பொலிஸ் பரிசோதகரும் திட்டமிடப்படும் குற்றங்கள், கொலைகள், கடத்தல்கள், வன்புனர்வுகள் ஆகியவற்றின் விசாரணை அதிகாரியுமாகிய நிஷாந்த சில்வாவின் சாட்சியம் பதிவு செய்யப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment