கறுப்பு யூலை, முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைகள் விடுத்த சவாலும் எதிர்கால தமிழ்த்தே சியமும்!

381 0

1983 கறுப்பு யூலை இனப்படுகொலையானது ஈழத் தமிழரின் வாழ்வில் ஒரு பெரும் திருப்முனையாய் அமைந்தது. இலங்கைத் தீவில் தமிழரின் தாயகத்திற்கு வெளியே நாடு தழுவிய ரீதியில் ஈழத் தமிழர்கள் காணப்படும் இடமெல்லாம் யூலை 23ஆம் தேதி முதல் தொடர்ச்சியாக ஒருவாரம் இனப்படுகொலைக்கு உள்ளாயினர்.

வீதிகளிலும் படுகொலை செய்யப்பட்டனர், பயணங்களின் போதும் படுகொலை செய்யப்பட்டனர், பொது இடங்களிலும், வழிபாட்டுத் தலங்களிலும் படுகொலை செய்யப்பட்டனர். பணிமனைகளில் படுகொலை செய்யப்பட்டனர். திரைப்பட மாளிகைகளிலும் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களின் சொந்த வேலைத் தலங்களில் படுகொலை செய்யப்பட்டனர். தமிழர் குடியிருக்கும் வீடுகளில் எல்லாம் படுகொலை செய்யப்பட்டனர். சொத்தகள் சூறையாடப்பட்டன. தமிழர்களின் தொழிற்சாலைகள், கடைகள், வர்த்தக நிலையங்கள், வாகனங்கள் என்பனவெல்லாம் சூறையாடப்பட்டு எஞ்சியவை தீக்கிரையாக்கப்பட்டன.

தமிழரின் உயிருக்கும், உடமைக்கும், வாழ்விடத்திற்கும் பாதுகாப்பு இல்லை என்பது பரிபூரண உண்மையானது. அரசு, இராணுவம், பொலீஸ், சிங்கள சமூகம் என அனைத்தும் இணைந்த ஒரு பெரும் இனப்படுகொலை அரங்கேறியது. அதுவரை வளர்ந்து வந்த தமிழின எதிர்ப்புக் கருத்துருவம் இரத்தம் கொப்பளிக்கும் இனப்படுகொலையாக தீச்சுவாலை பொங்கும் பேரழிப்பாக வெளிப்பட்டது.

இதில் மனிதநேயம் கொண்ட ஒரு சில சிங்கள மக்கள் காணப்பட்டாலும் பொதுவான அரச – இராணுவ சமூகப் போக்கு தமிழின அழிப்புத் தன்மை கொண்டதாகவே காணப்பட்டது. இந்நிலையில் இனியும் சிங்கள இனத்துடன் இணைந்து வாழ முடியாது என்ற முடிவிற்கு தமிழினம் உள்ளானது. சிங்கள-பௌத்த நிறுவனங்களும், சிங்கள ஊடகங்களுங்கூட இன அழிப்பிற்கான ஆதரவாளர்களாகவே காணப்பட்டனர்.

இந்நிலையில் தமிழர் மத்தியில் இடதுசாரிகளோ, வலதுசாரிகளோ, நடுநிலையாளர்களோ பெருமளவிற்கு ஏகோபித்த குரலில் சிங்கள இனத்துடன் இணைந்து வாழ முடியாது என்ற முடிவிற்கு வந்தனர். இப்பின்னணியில் தமிழரின் பாதுகாப்பிற்கும், அமைதியான வாழ்விற்கும் தமிழர் ஆயுதம் ஏந்திப் போராடி தனியரசு அமைக்க வேண்டும் என்ற முடிவிற்கு தமிழ் மக்கள் வந்தனர். இதனால் ஆயுதப் போராட்டத்திற்கு தமிழ் மக்கள் பேராதரவு அளிக்கும் நிலை நிதர்சனமானது.

இந்நிலையில் தமிழ் மக்கள் மத்தியில் ஆயுதம் தாங்கிய பல்வேறு அமைப்புக்கள் உருப்பெற்றன. இராணுவப் பரிமாணம் கொண்ட தமிழ்த் தேசியவாதம் முதன்மை பெற்றது. 1983 கறுப்பு யூலை தமிழ் மக்கள் மத்தியில் ஆயுத பரிமாணங் கொண்ட தமிழ்த் தேசியவாதம் உருப்பெற வழிவகுத்ததது. பல்வேறு ஆயுதந்தாங்கிய அமைப்புகள் தோன்றினாலும் இதில் விடுதலைப் புலிகள் தனிப்பெரும் அமைப்பாகினர்.

கறுப்பு யூலை இனப்படுகொலையானது தமிழ் மண்ணிற்கு வெளியே தமிழர்கள் சிங்கள அரசாலும், இராணுவத்தாலும், சிங்கள சமூகத்தாலும் படுகொலைக்கு உள்ளாகினர். ஆனால் இதன் பின்பு அரசு இராணுவ பரிமாணங்கொண்ட இன அழிப்புக் கோட்ப்பாட்டை தமிழ் மண்ணில் அரங்கேற்றத் தொடங்கியது. அதன் உச்சகட்டமாக 2009ல் முள்ளிவாய்காலில் தமிழினம் இராணுவ ரீதியில் பெருபெடுப்பிலான இன அழிப்பிற்கு உள்ளானதோடு தமிழ்த் தரப்பில் எழுந்த ஆயுதந்தாங்கிய போராட்டம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டது.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தமிழ் மக்களுக்கு பல புதிய செய்திகளை சொல்லியது. சாத்வீக போராட்டங்களும் தோற்கடிக்கப்பட்டன, ஆயுதப் போராட்டங்களும் தோற்கடிக்கப்பட்டன. எல்லாக் காலத்திலும் அனைத்து தலைவர்களினதும் தலைமையின் கீழான அனைத்துவகைப் போராட்டங்களும் ஒரு நூற்றாண்டாக தொடர்ந்து தோற்கடிப்படும் வரலாறு அரங்கேறியது. தமிழ்த் தேசியம் பல்வேறு காலகட்டத்திலும் பல்வேறு வகையிலும் தொடர்ச்சியாக தோற்கடிக்கப்படும் நிலையே வரலாறானது.

இந்நிலையில் முள்ளிவாய்க்காலின் பின் அடுத்தகட்டம் என்ன என்ற கேள்வி தமிழ் மக்கள் மத்தியில் எழுந்தது. மொத்தத்தில் தமிழ் மக்கள் எதிரியின் காலடியில் மாண்டுகிடப்பவர்களாய், அந்நியர்களின் கரங்களில் சிக்குண்டவர்களாய், சொந்தத் தலைவர்களால் ஏலத்திற்கு விடப்பட்டவர்களாய், அரசியல் பாலைவனத்தில் அவஸ்தைப்படும் நிலை உருவாகியுள்ளது.

முள்ளிவாய்க்காலின் பின்னான 8 ஆண்டுகால தமிழ் அரசியலின் இறுதி விளைவு நல்லாட்சி அரசாங்கத்திற்கும், இனப்படுகொலை வடுவுக்கும் சேவை செய்வதாய் தன் தலைவிதியை ஆக்கிக் கொண்டது.

தமிழ்த் தேசியமானது இலங்கையின் சுதந்திரத்தை அண்டிய காலத்திலிருநது பொன்னம்பலம் காலம், செல்வநாயகம் காலம், அமிர்தலிங்கம் காலம், பிரபாகரன் காலம் இறுதியாக சம்பந்தன் காலமென பல காலகட்டத் தலைமைகளுக்கு ஊடாகப் பயணிக்கிறது.

ஆனால் தமிழ்த் தேசியம் தனக்கான பாதுகாப்பையோ, தேசிய பரிமாணத்தையோ நிலைநிறுத்தக்கூடிய நிலையை அடையமுடியாது உள்ளது. அப்படி என்றால் தமிழ்த் தேசிய வடிவமைப்பிலும் அதற்கான அரசியலிலும் எங்கோ மாபெரும் தவறுகள் உள்ளன என்று அர்த்தம்.

அவற்றை மனதார ஏற்று சரி செய்து கொள்ளாமல் தமிழ்த் தேசியம் தனக்குரிய பாதுகாப்பையோ, வளர்ச்சியையோ எட்ட முடியாது.

தமிழ்த் தேசியத்தின் பிரதான பிரச்சனை உயிருக்கும், உடமைக்கும், வாழ்விடத்திற்குமான பாதுகாப்பு. முழு இலங்கையும் அவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று ஆனபின்பு கறுப்பு யூலையின் பின் தமிழினம் தன் பாதுகாப்பை தன் தாயகத்தில் தேட முற்பட்டு வடக்கு-கிழக்கு நோக்கி ஓடியது. வசதிபடைத்தோர் வெளிநாடுகளுக்கு ஓடினர்.

ஆனால் முள்ளிவாய்க்காலில் அரங்கேறிய அரச-இராணுவ ரீதியிலான இனப்படுகொலை அவர்களின் தாயகத்திலும் அவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது.

பாரீய கறுப்பு யூலை இனப்படுகொலை நிகழ்ந்த போது தமிழ் மக்கள் தமக்கான பாதுகாப்பை தாமே தேடும் முகமாக ஆயுதப் போரட்டத்தில் அக்கறை செலுத்தினர். அப்போது அவர்கள் மனிதாபிமானம், மனிதஉரிமைகள் கோரி யாரிடமும் கையேந்துவற்குப் பதிலாக தமக்கான பாதுகாப்பை தாமே நிலைநிறுத்த முற்பட்டு ஆயுந்தாங்கிய போராட்டத்திற்கு ஆதரவு அளித்தனர்.

ஆனால் இங்குதான் ஒரு விபரீதமான நாடகம் அரங்கேறியது. தமிழ் மக்களை அவர்களின் தாயத்திற்கு வெளியே இனப்படுகொலை புரிந்தோர் பின்பு அவர்களை தாயகத்தில் இராணுவ ரீதியில் இனப்படுகொலைபுரிய முற்பட்டனர்.

அப்போது வெறுமனே உள்நாட்டுப் பலத்தினால் அதனை செய்ய முடியாது என்பதை உணர்ந்த ஆட்சியாளர்கள் சர்வதேச அரசுகளின் பலத்தினால் ஈழத் தமிழர்களை சுற்றிவளைத்து முள்ளிவாய்க்காலில் ஒரு மூலையில் ஒதுக்கி ஏதோ கிருமிகளை கொல்வது போல் கேட்பாரின்றி. பார்ப்பாரின்றி, குரல் கொடுக்க யாருமின்றி, துணைக்குவர எவருமின்றி படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டு அநாதைப் பிணங்களாய் வீசப்படுக்கிடந்தனர்.

மதம், பண்பாடு, கிரிகைகள் என்பனவெல்லாம் புதைகுழியிற்தான் ஆரம்பமாகின. ஆனால் தமிழர்களுக்கு புதைகுழிகளும் கிடைக்கவில்லை, கிரிகைகளும் நிகழவில்லை. இறந்தோரின் அவலக்குரல்களும், உறவினர்களின் கண்ணீர் ஆற்றையும் தவிர அவர்களுக்கு ஆறுதல் எதுவம் இல்லை. எதிரி சர்வதேச அரசுகளால் தமிழர்களை சுற்றிவளைத்து படுகொலை செய்த போது தமிழருக்கு ஆதரவு அளிக்கவோ காப்பாற்றவோ உலகில் இருந்து ஒரு கரங்கூட எழவில்லை. அதேவேளை உலக அரங்கின் ஆதரவையும், சர்வதேச நாடுகளின் ஒட்டுமொத்த ஆதரவையும் எதிரி பெற்றிருந்த அதேவேளை தமிழ்த் தரப்பால் உலகில் ஓர் அரசின் ஆதரவைக்கூட பெற்றுக் கொள்ள முடியவில்லை.

எப்படியோ இரத்தமும், தசையுமாக முள்ளிவாய்க்கால் தமிழ் மக்களுக்கு பல பாடங்களைப் புகட்டியது. எதிரி கோட்டை கொத்தளங்களை மட்டும் அழிக்கவில்லை கூடவே தமிழர்களிடம் இருந்த கற்பனைகளையும், கற்பிதங்களையும் அழித்துள்ளான். யதார்த்தத்தை சுடுகோல் கொண்டு போதித்துள்ளான். இது எதிர்மறை ஆசானின் போதனை. இவ்விடத்திற்தான் தமிழினம் தன்னை சரி செய்து புதுப்பித்து முன்னேற வேண்டிய ஒரு வரலாற்றுக் கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

ஒரு பலங்கொண்ட பண்பாடானது இழப்புக்களையும், தோல்விகளையும் மின்னலென உள்வாங்கி தன்னை சரிசெய்து முன்னேறவல்ல பலத்தை தன்னகத்தே கொண்டதாய் அமைந்திருக்கும். அதை தமிழ்ப் பண்பாடு நிரூபிக்கப் போகின்றதா இல்லையா என்பதே கேள்வி.

இப்போது தேசிய கட்டுமானம் சம்பந்தமாக உலக அனுபவத்திலிருந்து தக்கனவற்றைப் பெற்று தமிழ்த் தேசியத்தை புதிய வடிவப்படுத்தும் முயற்சியில் ஈடுபட வேண்டியது அவசியம்.

இரண்டாம் உலக மகா யுத்தத்திற்கு முன் யப்பானிய தேசியம் இதில் இரண்டு கட்டங்களுக்குள்ளால் பயணித்தது. 1850களில் இருந்து அது தன்னை நவீன மயமாக்கி ஒரு நவீன அரசியல் – பொருளாதார தொழில் நுட்பம் சார்ந்த ஒரு தேசிய கட்டுமானத்தை வடிவமைத்தது. அந்த பயணத்தில் அது சுமாராக 50 ஆண்டுகளில் அது முதற்கட்ட வெற்றியையீட்டி ஒரு நவீன யப்பானிய தேசியத்தை வடிவமைத்துக் கொண்டது.

ஆனால் முதலாம் உலக மகா யுத்தத்தைத் தொடர்ந்து யப்பானிய தேசியம் இராணுவ மேலாதிக்க தேசியமாக தன்னை வடிவமைத்து பயணிக்கத் தொடங்கியது. தொடர் வண்டிப் பாதையில் ஏற்றப்பட்ட தொடர்வண்டி போல, அதுவும் வளைவு, நெளிவு, சந்தி, சரிவுகளற்ற ஒரு நேர் கோட்டு இராணுவத் தண்டவாளத்தின் மீது யப்பானிய தேசியம் பயணித்தது. இறுதியில் அது Kassandra Cross ஆக ஒற்றைவழி இராணுவ தேசியத் தண்டவாளப் பாதையில் பெருங்கடலில் வீழ்த்தப்பட்டது. அணுகுண்டுகள் அவற்றைத் தீர்மானித்தன.

ஆனால் இதன்பின்பு யப்பான் அடுத்த கட்ட நவீன தேசியத்திற்கு தன்னை தயாராக்கியது. அது யப்பானிய தேசியவாதத்தில் மூன்றாவது கட்டம். இப்போது யப்பானின் பாதுகாப்பு அமெரிக்காவின் கையில் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. அது ஒரு பாரதூரமான சரணாகதிதான். ஆனால் அந்த சரணாகதிக்கும் தமக்கு வாய்ப்பான ஓர் இடத்தை யப்பானியர்கள் தேடிக் கண்டுபிடித்தனர். அதுதான் பொருளாதார தொழில் நுட்பத் தேசியவாதமாகும்.

யப்பானியர்கள் தமது தொன்மையும் , பெருமையும் மிக்க பண்பாட்டை 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதிக்குப் பின்பு நவீன பரிமாணத்துடன் புதுப்பித்தனர். இதனால் அவர்களுடைய பண்பாடு குறைவற்ற அடிப்படை வளர்ச்சியைக் கொண்டிருந்தது. அதற்கான கட்டுமானங்களையும் அது கொண்டிருந்தது. எனவே யுத்தத்தால் அழிந்த யப்பானியர்கள் தமது பண்பாட்டைக் காப்பாற்ற புதிய முயற்சிகள் அவசியப்படவில்லை.

ஆனால் யுத்தத்தால் சிதலமுற்ற யப்பான், யுத்த குற்றங்களால் அவமானத்திற்கு உள்ளான யப்பான் தன்னை சரிசெய்து சீர்செய்யும் பணியிலும், தன்னை உலகில் வேறுவகையில் அங்கீகாரத்துடன் நிலைநிறுத்தும் வழியிலும் தனக்குப் பொருத்தமான மூன்றாம் கட்ட நவீன தேசியவாதத்தை வடிவமைத்தது. அது பொளாதார தொழில்நுட்ப தேசியவாதமாகும்.

இதேவேளை 2ஆம் உலக மகாயுத்த காலத்தில் பாரீய இன அழிப்பிற்கு உள்ளான யூத இனம் தன்னை 2000 ஆண்டுகளைக் கொண்ட இடைவெளிக்குப் பின்பு ஒரு பலம்பொருந்திய தேசிய இனமாகவும், தேசிய அரசாகவும் வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டது. அது தனது தேசியவாதத்திற்கு ஹிட்லரின் இனப்படுகொலையை முதலீடாக்கியது.

யூத அரசை அமைப்பதற்கு சர்வதேச ஆதரவைப் பெறுதல் அதேவேளை யூத தேசிய இனத்திற்கான அடிப்படையைக் கட்டியெழுப்புதல் என்னும் இருபெரும் பணிகளை ஒருங்குசேர ஆற்ற வேண்டியிருந்தது. அதாவது 2000 ஆண்டுகளாக ஐரோப்பிய மற்றும் வடஅமெரிக்க நிலப்பரப்பு எங்கு பரந்து குடியேறி தம் தேசிய மொழியையும், தேசியப் பண்பாட்டையும், தேசிய ஒருமைப்பாட்டையும் இழந்து குடியேறிய பல்வேறு நாடுகளிலும் உதிரிகளாக வாழ்ந்துவந்த யூதர்கள் இப்போது ஒரு தேசிய இனமாக தம்மை கட்டமைப்புச் செய்வது இலகுவான காரியமல்லல.

யூதர்களுக்கான பாதுகாப்பு அது யூத தேசம் மட்டுமே. அதாவது ஐதீகத்தின் படி வாக்களிக்கப்பட்ட பூமியான (Promised Land) யூத தேசம் மட்டுமே என்ற முடிவிற்கு வந்தனர்.

“இரண்டு யூதன் ஒன்று சேர்ந்தால் மூன்று கட்சி கட்டுவான்” என்ற யூத பழமொழிக்கு மாறாக “யூதனைக் கண்டால் யூதன் உதவவேண்டும்”. “யூதனை யூதன் கொல்லக்கூடாது” என்ற புதிய அறைகூவலோடு, யூதன் எங்கு பிறந்தாலும், எங்கு வாழ்ந்தாலும் அவன் யூத தேசத்தின் குடிமகனாகவே பிறக்கிறான் என்ற விழுமியங்களோடு தங்கள் தேசியவாதத்தை கட்டமைப்புச் செய்தார்கள்.

ஹிட்லரின் இனப்படுகொலை புதிய யூத தேசத்தை அமைப்பதற்கான முதலீடாய் அமைந்தது. யூதனின் பாதுகாப்பு என்பதே அத்தேசியத்திற்கான இரத்தோட்டமாய் அமைந்தது. விஞ்ஞானம் அவர்களினது தேசியத்திற்கான உயிர்நாடியாய் அமைந்தது. இதன்படி ஹிட்லரின் இனப்படுகொலையை முதலீடாகவும், பாதுகாப்பை இரத்தோட்டமாகவும், விஞ்ஞானத்தை உயிர்நாடியாகவும் கொண்டு அரசியல – இராணுவ – இராசதந்திர பரிமாணத்தோடு தமது தேசியத்தை அவர்கள் வடிவமைத்தார்கள். இதில் முதற்கட்டம் தேசியத்தன்மையாக அமைந்த போதிலும் இரண்டாவது கட்டம் ஆக்கிரமிப்புத் தன்மை கொண்ட தேசியவாதமாக அமைந்தது என்பது இன்னொரு கதை.

யப்பானிய தேசியவாத்தில் இருந்தும், யூத தேசியவாத்தில் இருந்தும் ஈழத் தமிழர்கள் படிப்பினைகளையும், பொறுத்தமான நல்லவற்றையும் பெற வேண்டுமே தவிர அவற்றை பிரதிபண்ண வேண்டுமென்றில்லை. யப்பானிய தேசியவாதத்தில் தொழில்நுட்பம் பெற்ற முக்கியத்துவத்தை யூத தேசியவாதத்தில் விஞ்ஞானம் பெற்றிருக்கின்றது என்பது கவனத்திற்குரியது.

அதாவது விஞ்ஞானம் புதிய புதிய தொழில்நுட்பங்களுக்கு எல்லாம் அடிப்படையானது. உலகில் தலைசிறந்த விஞ்ஞானிகள் அதிகமாக யூத இனத்தில் உண்டு என்பதும் கவனத்திற்குரியது. அவர்களது தேசிய வளர்ச்சிக்கு விஞ்ஞானம் மற்றும் அரசியல், இராசதந்திர அறிவியல் மிகவும் அடிப்படையானது. அத்துடன் அவர்கள் உலகளாவிய அர்த்தத்தில் பொருளாதாரத்தை முகாமைத்துவப்படுத்தும் நிபுணத்துவம் கொண்டவார்களாயும் உள்ளனர்.

யூத தேசம் தென் அமெரிக்காவிலா அல்லது ஆப்பிரிக்காவிலா அமைக்கப்ட வேண்டும் என்ற கேள்வி எழுந்த போது அது மத்திய கிழக்கிற்தான் அமைக்கப்பட வேண்டும் என்ற முடிவை ஸ்டாலின் தலைமையிலான சோவியத் யூனியன் எடுத்தது. அதற்குக் கூறப்பட்ட காரணம் மத்திய கால அரசியல் – சமூக கலாச்சாரத்தைக் கொண்ட மத்திய கிழக்கில் யூதயின அரசு அமைக்கப்பட்டால் விஞ்ஞானம் மற்றும் அறிவியல் வளர்ச்சியடைந்திருக்கும் யூத இனம் மத்திய கிழக்கை நவீன வளர்ச்சிக்குரியதாக மாற்றக்கூடிய நொதியமாக செயற்படும் என்பதாகும்.

ஆனால் வரலாறு இதற்கு எதிர்மாறானதாக அமைந்தது என்பது வேறுகதை. எப்படியோ யூதர்களின் அறிவியல் வளர்ச்சி அவர்களது விரைவான தேசிய வளர்ச்சிக்கு அத்திவாரமானது.

யப்பானியர்களும், யூதர்களும் பேரழிவிலிருந்து மீண்டு தம்மை சரிசெய்து முன்னேறினர் என்பது இங்கு பெரிதும் கவனத்திற்குரியது.

கறுப்பு யூலை இனப்படுகொலையோடு ஆயுதப் பரிமாணம் பெற்ற தமிழ்த் தேசியம் முள்ளிவாய்க்காலில் இலங்கை அரசால் பாரீய இராணுவ பரிமாணங்கொண்டு சர்வதேச அரசுகளின் ஆதரவைக் கொண்டு நிர்மூலமாக்கப்பட்ட கதை ஒரு வரலாறு. ஆனால் அதே நிர்மூலமாக்கப்பட்டமையின் மறுபக்கமாக இனப்படுகொலையின் பேரால் தமிழ் மக்களுக்கு சாதகமான ஒரு சர்வதேச களம் தோன்றியது.

இந்த வகையில் அந்த இனப்படுகொலையை முதலீடாகக் கொண்டு சர்வதேச களத்தில் அறுவடை செய்வதற்கான அரசியல் வாய்ப்பு தமிழ் மக்கள் முன் விரிந்து கிடந்தது. ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அந்த இனப்படுகொலையை முதலீடாக்கி சர்வதேச களத்தில் பயிர் செய்வதற்குப் பதிலாக அக்களத்தை எதிரிக்கு சாதகமான வகையில் சிதைத்துவிட்டது. சர்வதேச அரங்கில் அவமானப்பட்ட எதிரிக்கு சர்வதேச அரங்கமே ஒரு வளமான களமாக அமைவதற்கான அரசியல் சேவையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிரிக்கு செய்து கொடுத்துள்ளது.

இங்கு பிரச்சனை இதுதான் சாதகமான சர்வதேச சூழல் ஏற்பட்டபோது அந்த சர்வதேச சக்திகளை சாட்சியாக வைத்துக் கொண்டு, அவர்களைப் பொறுப்பாக்கி சிங்களத் தலைவர்களுடன் ஓர் இரகசிய அரசியல் ஒப்பந்தத்தை அவர்கள் செய்திருக்க வேண்டும். வெறுமனே சிறிசேன-ரணில்-சந்திரிக்கா போன்ற சிங்களத் தலைவர்களை நம்புகிறேன் என்று திரு. ஆர்.சம்பந்தன் சொல்வதற்குப் பதிலாக அவர்களுடன் நிர்பந்தத்திற்குரிய ஓர் அரசியல் ஒப்பந்தத்தை மேற்படி சர்வதேச சக்திகள் முன்னிலையில் மேற்கொண்டு அதன் மூலம் அவர்கள் அரசியலை நகர்த்தியிருக்க வேண்டும்.

அவ்வாறான சர்வதேச கடப்பாட்டிற்குரிய இரகசிய அல்லது சர்வதேச சமாதான உருவாக்கிகள் என்ற ஒரு குழுவின் முன் அத்தகைய வெளிப்படையான ஓர் ஒப்பந்தத்தை செய்திருக்குமிடத்து இந்த அரசாங்கத்தால் தமிழ் மக்களை இலகுவில் ஏமாற்றியிருக்க முடியாது.

இப்போது இலங்கை அரசை எல்லாவகையிலும் போர்க்குற்றம் உட்பட்ட அனைத்து நெருக்கடியிலிருந்து உதவிபுரிந்துவிட்ட பின்பு அதாவது “ஆறு கடக்கும் வரை அண்ணை பிடி தம்பி பிடி, ஆறு கடந்த பின்பு நீ யாரோ நான் யாரோ” என்றவாறு “நல்லாட்சி அரசாங்கம்” தன் காரியம் முடிய எதற்கும் தீர்வின்றி, அரசியல் தீர்வின்றி அனைத்தையும் கைவிரிக்கும் நிலையில் காணப்படுகிறது.

இனி சிங்கள ஆட்சியாளர்கள் எம்மை ஏமாற்றிவிட்டனார்தான் ஆனால் அவர்களை அம்பலப்படுத்துவதில் நாம் வெற்றி பெற்றுவிட்டோம் என்று மார்தட்டுவதில் எந்தப்பயனும் இல்லை. அதாவது தம்மை சர்வதேச நாடுகள் ஆதரிப்பதாகவும் எனவே நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்க ஆதரிக்குமாறு கூறுகின்றன என்றும் கூறிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அந்த சர்வதேச சக்திகளை பொறுப்பாக்கி ஏதோ ஒருவகையில் முதலில் பிரச்சனைக்கு பரிகாரம் பின்பு ஏனையவை என்ற ஒரு காலா அட்டவணைக்குரிய ஒப்பந்தத்தைச் செய்து அதன் அடிப்படையில் முதலில் தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு கண்டு அதன் பின்பு ஏனைய பிரச்சனைகளை அணுகியிருந்ததால் ஓர் ஆண்டிற்குள் நல்லாட்சி அரசாங்கம் அம்பலப்பட்டிருக்கும், சர்வதேச சக்திகளுக்கும் பொறுப்பேற்பட்டிருக்கும்.

 

ஆனால் இப்போது எதிரியின் நலனுக்கேற்ப அனைத்தும் தாரைவார்க்கப்பட்ட பின்பு தமிழர்களுக்கு நல்லாட்சி அரசாங்கம் கைவிரிக்கும் போது வெறுங்கையுடன் வீடுபுக்கும் நிலைமட்டுமல்ல இருந்த சாதகமான சர்வதேச உள்நாட்டு சூழல் அனைத்தையும் தமிழருக்குப் பாதகமான முறையில் கெடுத்துவிட்டு எதிரிக்குத் துணைபோகும் அரசியலை வெற்றிகரமாக நிறைவேற்றியவர்களாக தமிழ்த் தலைவர்கள் காணப்படுகின்றனர்.

முள்ளிவாய்க்காலின் பின்பு இனப்படுகொலை முதலீடாகக் கொண்டு தமிழ்த் தேசியத்தை புனரமைப்புச் செய்திருக்க வேண்டும். அத்துடன் “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்ற பூகோளவாத சிந்தனையுடனும் “தாயும் பிள்ளையானாலும் வாயும் வயிறும் வேறு” என்ற சுயநிர்ணய நிலையோடும் ஒன்றிணைத்து ஒரு புதிய தமிழ்த் தேசியத்தை உருவாக்க வேண்டிய அவசியத்தை வரலாறு தமிழ் மக்களுக்கு கட்டளையாக பிறப்பித்திருக்கிறது.

ஆனால் அக்கட்டளைக்கு செவிசாய்க்கும் தன்மையை தமிழ்த் தலைவர்கள் இன்னும் கொண்டிருக்கவில்லை மீண்டும் ஒரு முள்ளிவாய்க்காலை அரசியல்-இராசதந்திர அரங்கில் நல்லாட்சி அரசாங்கம் நிறைவேற்றியிருக்கிறது. அதற்கு உதவியவர்களாக தமிழ்த் தலைவர்கள் உண்டு என்ற துயரநிலையை வரலாறு கண்ணீர் மல்க காட்சிப்படுத்துகிறது.

கறுப்பு யூலை விட்ட சவாலை எதிர்கொள்வதில் தமிழர்கள் இன்னும் வெற்றி பெறவில்லை. அதேவேளை அழிவின் மத்தியிலுங்கூட முள்ளிவாய்க்கால் தந்த எதிர்மறை வாய்ப்புக்களை பயிரிட்டு அறுவடை செய்ய தமிழ்த் தலைவர்களுக்குத் தெரியவும் இல்லை. அவர்கள் அதை விரும்பவும் இல்லை. அவர்களால் அது முடியவும் இல்லை.

முடிந்ததெல்லாம் நல்லாட்சி அரசாங்கத்தின் இன அழிப்புக் கொள்கையை இன்னொரு வகையில் முன்னெடுக்க சேவை செய்தமை மட்டுமே. இதனையையும் ஒரு படிப்பினையாக்கி அடுத்த கட்டத்திற்கு தமிழ்த் தேசியத்தை முன்னெடுத்த தமிழினத்தைப் பாதுகாப்பதற்கான சிந்தனைக்கு வழிசமைக்க வேண்டிய பொறுப்பு தமிழினத்தைச் சார்ந்தது.

மு.திருநாவுக்கரசு

 

Leave a comment