காணாமல் போனோர் அலுவலகம் நீதிமன்றத்திற்கு ஒப்பானதா?

411 0

2017 இலக்கம் 9 என்ற காணாமல் போனோர் தொடர்பான செயலக (திருத்தம்) சட்ட மூலத்தின் கீழ் ஸ்தாபிக்கப்படும் நிறுவனம் “அலுவலகம்” என அழைக்கப்பட்டாலும் அது நீதிமன்றத்திற்கு இணையானது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மாநாயக்க தேரர்கள் உட்பட பௌத்த சங்க சபையினருக்கு அனுப்பியுள்ள பகிரங்க கடிதத்திலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சட்டத்தின் 12வது பந்திக்கு அமைய செயலகம் முறைப்பாடுகளை ஏற்று விசாரணைகளை நடத்த, சாட்சியாளர்களிடம் வாக்குமூலங்களை பெற, குற்றம் சுமத்தப்படும் நபர்களை அழைக்கும் உத்தரவுகளை பிறப்பிக்க மற்றும் விசாரணைகளை நடத்தவும் நீதிமன்றத்திற்கு இணையான அதிகாரங்கள் சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு உள்ளது என அந்தக் கடிதத்தில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் செயலகத்தின் அதிகாரிகள் இரவு, பகல் என எந்த நேரமாக இருந்தாலும் பொலிஸ் நிலையங்கள், படை முகாம்கள் அல்லது சிறைச்சாலைக்குள் சென்று அவர்களுக்கு தேவையான ஆவணங்கள் உள்ளிட்ட இதர பொருட்களையும் தமது பொருப்பில் எடுத்துக்கொள்ளும் அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் எவரேனும் இந்த ஆணைக்குழுவுக்கு ஒத்துழைக்க மறுப்பின், அது மேன்முறையீட்டு நீதிமன்றத்தை அவமதிப்பதற்கு ஒப்பானதாக கருதி தண்டனை வழங்க முடியும் எனவும் மஹிந்த தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொண்டு வரப்பட்ட இந்த சட்டமூலத்தை கூட்டு எதிர்க்கட்சி எதிர்த்த போதும், அதனை மீறி, ஐக்கிய தேசியக் கட்சி, அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆகியன இணைந்து பலவந்தமாக இதனை நிறைவேற்றின எனவும் அவர் கூறியுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த எந்த தரப்பிடம் இருந்து நிதி ஆதாரங்களை பெற்றுக்கொள்ளவும், இந்த சட்டமூலத்தின் 21 பந்திக்கு அமைய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், இதற்கமைய, குறித்த அலுவலகத்திற்கு வெளிநாடு அரசுகள், சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் அல்லது தடை செய்யப்படாத தமிழ் புலி டயஸ்போரா அமைப்பிடம் இருந்தும் நிதியை பெற முடியும் என தெரிவித்துள்ளார்.

Leave a comment