தமிழகத்துக்கு வித்யாசாகர் ராவ் முழுநேர கவர்னர் ஆகிறார்: பிரதமர் மோடி

198 0

தமிழகத்தின் முழு நேர கவர்னராக வித்யாசாகர் ராவை நியமிக்க பிரதமர் மோடியும், பா.ஜ.க. தலைவர் அமித்ஷாவும் முடிவு செய்துள்ளனர்.

தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்களில் கவர்னர் பதவி இடங்கள் காலியாக உள்ளன.

தமிழக கவர்னர் பொறுப்பை மராட்டிய மாநில கவர்னர் வித்யாசாகர் ராவ் கூடுதலாக கவனித்து வருகிறார். அதுபோல தெலுங்கானா மாநில கவர்னர் பொறுப்பை ஆந்திர கவர்னர் நரசிம்மன் கவனித்து வருகிறார்.

கவர்னர்களின் பணி சுமையை குறைக்க 7 மாநிலங்களுக்கும் புதிய கவர்னர்களை நியமனம் செய்ய மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்வு முடிந்த நிலையில் அடுத்து, மத்திய மந்திரி சபையை மாற்றி அமைக்க வேண்டிய நிர்ப்பந்தம் பிரதமர் மோடிக்கு ஏற்பட்டுள்ளது.

மத்திய மந்திரி வெங்கய்யா நாயுடு துணை ஜனாதிபதியாக தேர்வு ஆனதாலும், ஏற்கனவே சில மத்திய மந்திரிகள் வேறு பணிகளுக்காக பதவியை ராஜினாமா செய்துள்ளதாலும், புதிய மந்திரிகளாக யார்-யாரை நியமனம் செய்யலாம் என்று பிரதமர் மோடி ஆலோசித்து வருகிறார்.

மேலும் மத்திய மந்திரி கல்ராஜ் மிஸ்ராவுக்கு 75 வயதுக்கு மேல் ஆவதால் அவரை மத்திய மந்திரி சபையில் இருந்து விலக்க பிரதமர் மோடி தீர்மானித்துள்ளார்.

மேலும் சில ராஜாங்க மந்திரிகளும் பதவி இழக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. அடுத்த மாதம் (ஆகஸ்டு) 11-ந்தேதி பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் முடிந்த பிறகு மந்திரிசபை மாற்றம் செய்யப்பட உள்ளது. அப்போது யார்-யார் புதிய மந்திரிகளாவார்கள் என்பது தெரிய வரும்.

மந்திரிசபை மாற்றத்துக்கிடையே புதிய கவர்னர்களை அறிவிக்க பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். மத்திய மந்திரி சபையில் இருந்து விலக்கப்படும் கல்ராஜ் மிஸ்ரா கவர்னராக நியமிக்கப்பட உள்ளார்.

தமிழ்நாட்டில் ரோசையா பதவி காலம் முடிந்த பிறகு, கவர்னர் பொறுப்பை மராட்டிய மாநில கவர்னர் வித்யாசாகர்ராவ் தொடர்ந்து கவனித்து வருகிறார். ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதும், ஜெயலலிதா மரணத்துக்கு பிறகும் தமிழக அரசியல் சூழ்நிலையை தற்காலிக கவர்னராக இருக்கும் வித்யாசாகர்ராவ் நன்கு கவனித்து வருகிறார்.

அ.தி.மு.க.வில் சலசலப்புகள் ஏற்பட்ட நிலையிலும் வித்யாசாகர் ராவ் மிக பொறுமையுடன் பிரச்சனைகளை கையாண்டார். எனவே அவரையே தமிழகத்தின் முழு நேர கவர்னராக நியமிக்க பிரதமர் மோடியும், பா.ஜ.க. தலைவர் அமித்ஷாவும் முடிவு செய்துள்ளனர்.

வித்யாசாகர் ராவ் தமிழ்நாட்டுக்கு வந்து விடும் பட்சத்தில் மராட்டிய மாநில கவர்னர் இடம் காலியாகும். அந்த இடத்துக்கு குஜராத் முன்னாள் முதல்-மந்திரி அனந்திபென் படேல் நியமனம் செய்யப்படுவார் என்று தெரிகிறது.

அதுபோல ஆந்திர கவர்னர் நரசிம்மன் பதவி காலம் முடிந்து விட்டதால் அவருக்கு பதில் ஆந்திரா, தெலுங்கானாவுக்கு புதிய கவர்னர்கள் நியமிக்கப்பட உள்ளனர். பீகார், மத்திய பிரதேசம், அருணாசல பிரதேசம், மேகாலயா ஆகிய மாநிலங்களுக்கும் புதிய கவர்னர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

பீகார், தெலுங்கானா, தமிழ்நாடு மூன்று மாநிலங்களிலும் பா.ஜ.க. அல்லாத அரசு இருப்பதால் இந்த மாநிலங்களில் நியமனம் செய்யப்படும் கவர்னர்கள் பற்றிய எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. புதிய கவர்னர்கள் பற்றிய பட்டியல் பா.ஜக. தேசிய தலைவர் அமித்ஷா தயார் செய்து முடித்துள்ளார்.

பா.ஜ.க. மூத்த தலைவர்களே கவர்னர்களாக நியமிக்கப்படுவார்கள் என்று தெரிய வந்துள்ளது.

Leave a comment