தி.மு.க. விரிக்கும் வலையில் கமல் சிக்கிவிடக் கூடாது என்று மதுரையில் காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.
காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன், மதுரையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா எதை எதிர்க்க வேண்டும்? எதை எதிர்க்கக்கூடாது? என தெரிந்து செயல்பட்டார். ஆனால் தற்போதைய தமிழக அரசு, சி.பி.ஐ., வருமான வரி சோதனைக்கு பயந்து உள்ளது. தங்களை காப்பாற்றிக் கொள்வதற்காக, மத்திய அரசிடம் தமிழக அரசு மண்டியிட்டு கிடக்கிறது.
‘லோக் ஆயுக்தா’ கேரளா, கர்நாடகம், ஒடிசா போன்ற மாநிலங்களில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளது. இதனை தமிழகத்திலும் செயல்படுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை வைத்துள்ளேன்.
நெடுவாசல் ஹைட்டோ கார்பன் திட்டம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இந்த திட்டத்தின் ஒப்பந்தம் பா.ஜனதா ஆதரவு நிறுவனத்திற்கே வழங்கப்பட உள்ளது. இதில் விதிமீறல் இல்லை என்பதை நம்ப முடியாது.
நடிகர் ரஜினி புதிய கட்சி தொடங்குவது உறுதி. அவருடன் காந்திய மக்கள் இயக்கம் கூட்டணி வைக்கும். ரஜினியின் அரசியல் பிரவேசம் அவசியம் என்பது குறித்து திருச்சியில் ஆகஸ்டு 20-ம் தேதி எங்களது இயக்கம் சார்பில் கூட்டம் நடத்தப்படும். ஊழலற்ற ஆட்சி, நிர்வாகத்தில் வெளிப்படை தன்மை, நதிகளை இணைப்பது போன்ற கொள்கையில் ரஜினி உறுதியாக உள்ளார்.
நடிகர் கமல் தி.மு.க. விரிக்கும் வலையில் சிக்கி விடக்கூடாது. அடிப்படை சிஸ்டம் என்பது அ.தி.மு.க.வில் மட்டும் கெடவில்லை, தி.மு.க.விலும் அதே நிலை தான். தமிழகத்தில் திறனற்ற ஆட்சியால் பொருளாதார வளர்ச்சி 5.38 சதவீதமாக சரிந்துள்ளது.
தமிழகத்தில் தமிழ், ஆங்கிலத்துடன், 3-வது மொழியாக இந்தி இருக்கலாம். ஆனால் பிற மாநிலங்களில் 3-வது மொழியாக தமிழ் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

