கொலை செய்யப்பட்ட மகளின் இறுதி சடங்கில் பங்கேற்க டிரம்பிடம் ‘விசா’வுக்கு கெஞ்சும் தந்தை

385 0

கொலை செய்யப்பட்ட தனது மகள் இறுதி சடங்கில் பங்கேற்க அமெரிக்கா வர விசாவுக்கு அனுமதி கிடைக்காததை தொடர்ந்து ஜமைக்காவில் உள்ள தந்தை டொனால்டு டிரம்ப்புக்கு சமூக வலை தளங்களில் கோரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்காவின் நியூ ஜெர்சி பகுதியை சேர்ந்தவள் அப்பீகெய்ல்ஸ்மித் (11). கடந்த வாரம் இவளை அண்டை வீட்டு வாலிபர் ஆண்ட்ரூஸ் இராசோ (18) என்பவர் குத்தி கொலை செய்தார்.

பின்னர் அவளது உடலை சிதைத்து போர்வையில் சுற்றி அவள் தங்கியிருந்த கீன்ஸ்பர்க் நகர அடுக்குமாடி குடியிருப்பின் கூரையில் மறைத்து வைத்திருந்தார்.

இதற்கிடையே சிறுமி அப்பீகெய்ல் ஸ்மித் உடல் மீட்கப்பட்டது. கொலையாளி ஆண்ட்ரூஸ் கைது செய்யப்டட்டார். சிறுமி அப்பீல் கெய்லின் இறுதி சடங்கு விரைவில் நடைபெற உள்ளது.

இவளது தந்தை கென்ராய் ஸ்மித் தற்போது ஜமைக்காவில் தங்கியுள்ளார். போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட அவர் கடந்த 2001-ம் ஆண்டு நாடு கடத்தப்பட்டார்.

தற்போது அவர் தனது மகள் இறுதி சடங்கில் பங்கேற்க அமெரிக்கா வர விசாவுக்கு விண்ணப்பித்தார். ஆனால் தற்போது விதிக்கப்பட்டுள்ள கடும் கட்டுப்பாடு காரணமாக அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை.

அதை தொடர்ந்து அவர் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புக்கு சமூக வலை தளங்களில் கோரிக்கை விடுத்துள்ளார். எனது மகள் மிகவும் துருதுருவென இருப்பாள், அவள் குழந்தையாக இருந்த போது விளையாடியது என் கண் முன்னால் ஓடுகிறது.

இறுதியாக ஒரு முறை அவள் முகத்தை பார்க்க எனக்கு அனுமதி தாருங்கள் அதற்காக விசா வழங்குங்கள் என கெஞ்சியபடி கோரிக்கை விடுத்துள்ளார். தனது தந்தைக்கு அனுமதி கோரி கொல்லப்பட்ட அப்பீகெயிலின் அக்காள் வடிசா ஸ்மித்தும் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். இவர் மேரிலேண்டில் தங்கியுள்ளார்.

ஆனால் அது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என குடியுரிமை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a comment