அல்-அக்சா மசூதி விவகாரம்: இஸ்ரேல் உடனான தொடர்புகளை துண்டிப்பதாக பாலஸ்தீன பிரதமர் அறிவிப்பு

256 0

ஜெருசலேம் நகரில் உள்ள அல்-அக்சா மசூதியில் நடத்தப்படும் பாதுகாப்பு சோதனையை இஸ்ரேல் கைவிடும் வரை அந்நாட்டுடனான அலுவல் ரீதியிலான உறவை துண்டிப்பதாக பாலஸ்தீன பிரதமர் முகம்மது அப்பாஸ் அறிவித்துள்ளார்.

இஸ்ரேலின் ஜெருசலேம் நகரில் இஸ்லாமியர்களின் மூன்றாவது புனித ஸ்தலமான அல்-அக்சா மசூதி உள்ளது. இங்கு பாலஸ்தீனைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் வெள்ளிக்கிழமைகளில் பிராத்தனையில் ஈடுபடுகின்றனர். சில நாட்களுக்கு முன் இந்நகரில் பாதுகாப்பு பணியிலிருந்த இஸ்ரேலிய பெண் போலீஸ் அதிகாரி துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டார்.

இதனால், மசூதிக்கு வெளியே மெட்டல் டிடெக்டர்கள் அமைத்து இஸ்ரேலிய போலீசார் அனைவரையும் சோதனை செய்து வருகின்றனர். இந்த சோதனைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று பாலஸ்தீனைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கைக்கலப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து, போலீசார் அங்கு கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி கூட்டத்தை கலைக்க முயன்றனர். அப்போது, 3 பாலஸ்தீனியர்கள் கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்டனர். சிறிது நேரத்திற்கு பின்னர் மேலும் 3 பாலஸ்தீனியர்கள் வன்முறையில் கொல்லப்பட்டனர். இதனால், அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகின்றது.

இந்நிலையில், 6 பாலஸ்தீனியர்கள் பலியனதை அடுத்து பிரதமர் முகம்மது அப்பாஸ் உயரதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். இதன் பின்னர், அல் அக்சா மசூதியில் பாதுகாப்பு சோதனைகள் நடத்துவதை இஸ்ரேல் கைவிடும் வரை அந்நாட்டுடனான அலுவல் ரீதியிலான உறவுகளை துண்டிக்குமாறு அதிகாரிகளுக்கு முகம்மது அப்பாஸ் உத்தரவிட்டுள்ளார்.

Leave a comment