அரசு இணையதளத்தில் அமைச்சர்கள் முகவரி நீக்கப்படவில்லை: அமைச்சர் சி.வி.சண்முகம்

230 0

தமிழக அரசு இணைய தளத்தில் அமைச்சர்களின் மின்னஞ்சல் முகவரி எதுவும் நீக்கப்படவில்லை என சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.

நடிகர் கமல்ஹாசனுக்கும், தமிழக அமைச்சர்களுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டு வருகிறது. அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் உள்ளது என்று கமல்ஹாசன் கூறினார்.

இதற்கு பதில் தெரிவித்த அமைச்சர்கள் ஊழல் பற்றி கூறும் கமல்ஹாசன் அதற்கான ஆதாரத்தை வெளியிட வேண்டும் என்றும், அவர் அரசியலுக்கு வந்து பதில் அளிக்க வேண்டும் என்றும் ஆளாளுக்கு ஒரு கருத்தை கூறினார்கள்.

இதையடுத்து கமல்ஹாசன் வெளியிட்ட அறிக்கையில் ‘‘இது டிஜிட்டல் யுகம்’’ என்பதால் அமைச்சர்கள் கேட்ட ஆதாரங்களையும், ஊழலால் அனுபவித்த இன்னல்களையும் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களுக்கு தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணைய தளத்திலும், இமெயிலிலும் அனுப்புங்கள்’’ என்று கூறி அதற்கான முகவரியையும் வெளியிட்டார்.

இந்த நிலையில் தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தேடிய போது அமைச்சர்களின் தொடர்பு எண், இ-மெயில் முகவரி எதுவும் இல்லை. அவை வெற்றிடமாக காணப்பட்டது.

இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் நிருபர்கள் கேட்டனர். அப்போது அவர் கூறியதாவது:-

அரசு இணைய தளத்தில் தமிழக அமைச்சர்களின் மின்னஞ்சல் முகவரி எதுவும் நீக்கப்படவில்லை. மக்கள் தங்கள் புகார்களை மின்னஞ்சலில் தான் அனுப்ப வேண்டும் என்பதில்லை. வாட்ஸ்- அப்பிலும் அனுப்பலாம்.

அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இணைய வேண்டும் என்பதையே நாங்கள் விரும்புகிறோம். இரட்டை இலை சின்னத்தை மீட்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment