உயர்த்தப்பட்ட சம்பளத்தை கல்வி பணிக்கு செலவிடுவேன்: எம்.எல்.ஏ. வசந்தகுமார்

1244 0

உயர்த்தப்பட்டுள்ள சம்பளத்தை கல்விப் பணிக்காக செலவிடுவேன் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. வசந்தகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.

தமிழக சட்டசபையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்களின் சம்பளத்தை 2 மடங்காக உயர்த்தி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார்.

எம்.எல்.ஏ.க்களுக்கு ஏற்கனவே ரூ.55 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட்டு வந்தது. இப்போது அவர்களின் சம்பளம் ரூ.1 லட்சத்து 5 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் உயர்த்தப்பட்டுள்ள சம்பளத்தை கல்விப் பணிக்காக செலவிடுவேன் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. வசந்தகுமார் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஊதிய உயர்வு இரு மடங்காக உயர்த்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

காமராஜரின் இலவச கல்வியில் பயின்று முன்னேறிய நான் 2006 முதல் 2011 வரை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த போது பெற்ற ஊதியத்தை பல கிராமங்களில் இலவச டியூசன் சென்டர் அமைத்ததோடு ஏழை மாணவர்களுக்கான கல்வி கட்டணத்திற்காக வழங்கி செலவு செய்தேன்.

கடந்த சட்டப்பேரவையில் நான் உறுப்பினராகும் வாய்ப்பை இழந்தாலும் மாதந்தோறும் அந்த தொகையை செலவு செய்து இலவச டியூசன் சென்டர்களையும் நடத்தியும், கல்வி உதவித்தொகையும் தொடர்ந்து வழங்கி வருகிறேன்.

இப்பொழுது சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கான ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளதால் மேலும் பல கிராமங்களில் இலவச டியூசன் சென்டர்கள் துவங்கி, கல்வி உதவித்தொகையை மேலும் பலருக்கு வழங்கி கல்வி வளர்ச்சிப் பணியை இரு மடங்காக உயர்த்துவேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a comment