கதிராமங்கலம் எண்ணெய் கசிவு விவகாரம்: தவறான தகவல்களை மக்கள் நம்ப வேண்டாம் – ஓ.என்.ஜி.சி. வேண்டுகோள்

223174 0

கதிராமங்கலம் எண்ணெய் குழாயில் கசிவு ஏற்பட்ட விவகாரம் தொடர்பாக தவறான தகவல்களை மக்கள் நம்ப வேண்டாம் என்று ஓ.என்.ஜி.சி. வேண்டுகோள் விடுத்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலம்-கொடியாலம் பகுதியில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு (ஓ.என்.ஜி.சி.) நிறுவனத்துக்கு சொந்தமான ஆழ்துளை கிணறுகளில் இருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கும் குழாயில் கசிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் உள்ள விளைநிலங்களும், குடிநீரும் பாதிக்கப்பட்டதாக கூறி பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் டெல்லியில் இருந்து சென்னைக்கு நேற்று வந்த, ஓ.என்.ஜி.சி. இயக்குனர் (நிலப்பகுதி) வி.பி.மகாவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

ஓ.என்.ஜி.சி. நிறுவனம் தமிழகத்தில் காவிரிப்படுகையில் 700-க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகளை தோண்டி உள்ளது. அதில் 33 ஆழ்துளை எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கும் நிலையங்கள் உள்ளன.

இவற்றில் இருந்து எடுக்கப்படும் எரிவாயு தமிழ்நாடு மின்வாரியம் உள்ளிட்ட தனியார் மின்சார நிலையங்களுக்கு அளிப்பதன் மூலம் 750 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகத்தில் வினியோகிக்கப்பட்டு வருகிறது.

கதிராமங்கலம் கிராமத்தில் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி செய்ய தோண்டப்பட்டது தான் குத்தாலம்-35 என்ற ஆழ்துளை கிணறு. இதில் இருந்து நாளொன்றுக்கு 13 கிலோ லிட்டர் எண்ணெயும், 38 ஆயிரம் கனமீட்டர் அளவிலான எரிவாயுவையும் எடுத்து வருகிறோம். குத்தாலம் எரிவாயு சேகரிக்கும் தொகுப்பு அமைப்புடன் 4 அங்குல விட்டமும், 9.5 கிலோ மீட்டர் நீளமும் கொண்ட குழாய் தொடர் அமைப்புடன் இந்த ஆழ்துளை கிணறு இணைக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 30-ந்தேதி காலை 8 மணிக்கு இந்த குழாயில் கசிவு ஏற்பட்டது. இதை உடனடியாக கண்டறிந்து அதை சரி செய்ய பணியாளர்கள் அங்கு சென்றனர். அதற்குள் சுயநல விஷமிகளால் தூண்டிவிடப்பட்டு அக்கிராம மக்கள் சிலர் எண்ணெய் குழாய் கசிவு ஏற்பட்ட இடத்தில் நின்று கொண்டு கசிவை சரி செய்ய வந்த ஊழியர்களை தடுத்தனர். இதனால் 30 நிமிடங்களில் சரி செய்யப்பட வேண்டிய இந்த கசிவு அன்று மாலை 6 மணிக்குத்தான் சரி செய்ய முடிந்தது. தொடர்ந்து சீரமைக்கும் பணி நடந்து 3-ந்தேதி சேதம் அடைந்த குழாய் முற்றிலும் மாற்றி அமைக்கப்பட்டது. இந்த கசிவு காரணமாக 2 ஆயிரம் லிட்டர் கச்சா எண்ணெய் வெளியே கசிந்தது. இதனால் ஒரு ஏக்கருக்கும் குறைவான விவசாய நிலம் சேதம் அடைந்தது. சம்பந்தப்பட்ட விவசாயிக்கு ரூ.59 ஆயிரம் இழப்பீட்டுத்தொகை வழங்கப்பட்டது.

இந்த கசிவுக்கான காரணம் குறித்து கண்டறிய கசிவு ஏற்பட்ட குழாயின் பாகம் மும்பையில் உள்ள ஒரு பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

காவிரி படுகையில் மீத்தேன், ஷேல் வாயு வளஆதாரங்களை கண்டறிவதற்கான திட்டங்களோ அல்லது எடுக்கும் திட்டங்களோ ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு கிடையாது. அதேபோல், தமிழகத்தில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு எடுக்கும் பணிகளை நிறுத்தும் எண்ணம் ஏதும் இல்லை.

ஓ.என்.ஜி.சி. ஆழ்துணை கிணறு இருக்கும் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைவதுடன், நிலத்தடி நீரும் பாதிக்கப்படுகிறது என்று புகார் சுமத்தப்பட்டு வருவதை ஏற்க முடியாது. தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறையினர் நிலத்தடி நீரை எடுத்து சென்று, நடத்திய ஆய்வில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனத்தால் நிலத்தடி நீர்மட்டம் குறையவில்லை என்றும், தண்ணீர் பாதிக்கப்படவில்லை என்றும் 2014-ம் ஆண்டு சான்று அளித்து உள்ளது.

சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றின் வழிகாட்டு நெறிகளை கடுமையாக பின்பற்றி வருகிறோம். எனினும் தொடர்ந்து இதே குற்றச்சாட்டு கூறப்பட்டு வருகிறது. எனவே கதிராமங்கலம் பகுதி பொதுமக்கள் இதுபோன்ற தவறான தகவல் பிரசாரங்கள், வதந்திகளை நம்ப வேண்டாம். நாட்டின் வளர்ச்சி பணிகளுக்கு பாடுபட்டு வரும் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு மகாவர் கூறினார்.

அப்போது ஓ.என்.ஜி.சி. இயக்குனர் (மனிதவளம்) டி.டி.மிஸ்ரா, தலைமை பொதுமேலாளர் (காவிரி படுகை) டி.ராஜேந்திரன், காரைக்கால் பகுதி செயல் இயக்குனர் குல்பீர்சிங், உதவி மேலாளர் (சமூக பொறுப்பு) எஸ்.எஸ்.சி.பார்த்திபன் உள்ளிட்ட அதிகாரிகள் இருந்தனர்.

Leave a comment