அப்துல்கலாம் மணிமண்டபம் திறப்பு விழா: பிரதமர் மோடி – 4 மாநில முதல்வர்கள் பங்கேற்பு

2868 0

ராமேசுவரத்தில் உள்ள பேய்க்கரும்பில் கட்டப்பட்டு வரும் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் மணிமண்டபத்தை வருகிற 27-ந் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இந்த விழாவில் 4 மாநில முதல்வர்கள் பங்கேற்கின்றனர்.

ராமேசுவரத்தில் உள்ள பேய்க்கரும்பில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் நினைவிடம் உள்ளது. இங்கு மத்திய பாதுகாப்பு துறையின் சார்பில் ரூ. 15 கோடி செலவில் மணி மண்டபம் கட்டப்பட்டு உள்ளது. இதனை அப்துல் கலாமின் 2-ம் ஆண்டு நினைவு நாளான வருகிற 27-ந் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

இதற்காக அன்று காலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு பிரதமர் மோடி மதுரை வருகிறார். விமான நிலையத்தில் அவரை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் வரவேற்கின்றனர்.

அதனைத் தொடர்ந்து மோடி, எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் ஹெலிகாப்டர் மூலம் உச்சிப்புளியில் உள்ள கடற்படை விமான தளத்துக்கு செல்கின்றனர்.

அங்கிருந்து பேய்க்கரும்புக்கு மோடி காரில் செல்கிறார். பின்னர் காலை 11.30 மணியளவில் மணி மண்டபத்தை பிரதமர் மோடி திறந்து வைத்து, பார்வையிடுகிறார். இந்த விழாவில் கவர்னர்கள் வித்யாசாகர் ராவ், சதாசிவம் (கேரளா), குஜராத், கோவா, மத்திய பிரதேச முதல்வர்கள், மத்திய மந்திரிகள் அருண்ஜெட்லி, நிர்மலா சீதாராமன், பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் மாநில அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.

விழா முடிந்ததும் பிரதமர் மோடி ரூ.50 கோடியில் தனுஷ்கோடியில் அமைக்கப்பட்டுள்ள சாலையை திறந்து வைப்பார் என்றும், ராமேசுவரம் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்கிறார் என்றும் கூறப்படுகிறது.பிரதமர் வருகையை யொட்டி கடந்த சில வாரங்களுக்கு முன்பு ராமேசுவரத்தில் பாம்பன் பாலம், ராமநாதசுவாமி கோவில், தனுஷ்கோடி ஆகிய பகுதிகளில் மத்திய பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

இந்நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தென்மண்டல ஐ.ஜி. சைலேஷ் குமார் யாதவ் ஆய்வு செய் தார். அப்போது கட்டுமான பணிகளை மேற்கொண்டுள்ள அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.பின்னர் மண்டபம் முகாம், உச்சிப்புளியில் உள்ள ஹெலிகாப்டர் இறங்குதளம், விழா நடைபெற உள்ள இடங்கள், பாம்பன் பாலம் போன்ற பகுதிகளை ஐ.ஜி. பார்வையிட்டார்.

அவருடன், டி.ஐ.ஜி. பிரதீப்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம் பிரகாஷ் மீனா ஆகியோர் உடன் இருந்தனர்.கலாம் மணி மண்டபத்தில் தற்போது 24 மணி நேரம் ஆயுதம் தாங்கிய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு சோதனைகள் நடத்தப்படுகிறது. மேலும் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு நடந்து வருகிறது.

Leave a comment