நீட் தேர்வு விவகாரத்தில் துரோகம் செய்த மத்திய, மாநில அரசுகளை கண்டித்து 21-ந் தேதி பா.ம.க. உண்ணாவிரதம்

397 0

நீட் தேர்வு விவகாரத்தில் துரோகம் செய்த மத்திய, மாநில அரசுகளை கண்டித்து பா.ம.க. சார்பில் 21-ந் தேதி சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது.

பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்தியா முழுவதும் சமச்சீரானப் பாடத்திட்டம் இல்லாத நிலையில், மருத்துவப் படிப்புக்காக நாடு முழுவதும் அனைவருக்கும் பொதுவான நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும் என்று மத்திய அரசு ஆணையிட்டது மிகப்பெரிய சமூக அநீதி ஆகும். நீட் தேர்வால் தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களால் மருத்துவப் படிப்பில் சேருவது குறித்து நினைத்துக்கூடப் பார்க்க முடியாது.

கடந்த ஆண்டு தமிழக அரசின் ஒற்றைச் சாளர கலந்தாய்வு மூலம் 2 ஆயிரத்து 318 மருத்துவ இடங்கள் நிரப்பப்பட்டன. அவற்றில் 2 ஆயிரத்து 279 இடங்களை மாநிலப் பாடத்திட்ட மாணவர்கள் கைப்பற்றினர். ஆனால் இந்த ஆண்டு 90 சதவீதம் இடங்களை இழப்பார்கள். இந்த அநீதியை களையும் வகையில் கொண்டு வரப்பட்ட மாநிலப்பாடத்திட்ட மாணவர்களுக்கான 85 சதவீத ஒதுக்கீட்டுக்கும் சட்டப் பாதுகாப்பு பெறாமல் மாநில அரசு துரோகம் செய்து விட்டது.

இத்தனை சிக்கலுக்கும் காரணம் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரும் சட்டங்களுக்கு ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெறும் விஷயத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வெற்றி பெற தமிழக அரசு தவறிவிட்டது தான்.

நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளின் துரோகத்தைக் கண்டித்து பா.ம.க. சார்பில் வரும் 21-ந் தேதி (வெள்ளிக்கிழமை) சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் எனது தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற இருக்கிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a comment