வித்தியா படுகொலை வழக்கு-சான்றுப்பொருட்கள் மன்றில் சமர்ப்பிப்பு

276 0

படுகொலைசெய்யப்பட்ட மாணவி வித்தியா மற்றும் படுகொலையுடன் தொடர்புடைய சந்தகத்துக்குரியவர்களின் மரபணு அறிக்கை உள்ளிட்ட மேலும் மூன்று சான்றுப்பொருட்கள் விசாரணை மன்றில் இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாண மேல் நீதிமன்றில் மூன்று மேல் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய விசாரணை மன்றில் இரண்டாம்கட்ட சாட்சிப் பதிவகள் இன்று ஆரம்பிக்கப்பட்டன.

இன்றைய முதலாம் நாள் காலைநேர அமர்வில், குறித்த சம்பவம் தொடர்பில் முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டிருந்த ஊர்காவற்துறை உப காவல்துறை பரிசோதகர் நீதிமன்றில் முன்னிலையாகி சாட்சியமளித்தார்

இதன்போது குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்துக்குரியவர்கள் எந்த அடிப்படையில் கைது செய்யப்பட்டவர்கள் என்பது தொடர்பில் அவர் சாட்சியமளித்துள்ளார்.

இதேவேளை, இந்த வழக்கின் 38 ஆவது சாட்சியான வித்யாவின் உறவினரும், அவரது சடலத்தை வைத்தியசாலையில் பெற்றுக்கொண்டவருமான தர்மலிங்கம் கார்த்திக் என்பவரும் மன்றில் முன்னிலையாகி சாட்சியமளித்தார்.

இதனிடையே, சட்டா மா அதிபர் திணைக்களத்தின் சார்பில் முன்னிலையாகிய அதிகாரிகள் வித்யா மற்றும் சந்தகத்துக்குரியவர்களின் மரபணு அறிக்கை உள்ளிட்ட மேலும் மூன்று சான்றுப்பொருட்களை மன்றில் சமர்ப்பித்துள்ளனர்.

அத்துடன், இந்த வழக்கில் மேலும் 2 சாட்சிகளை உள்ளீர்ப்பதாகவும் அவர்கள் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர்.

இவ்வாறாக இரண்டாம் கட்ட சாட்சிப் பதிவுகளின் முதலாம் நாள் சாட்சிப் பதிவுகள் இன்று நிறைவடைந்த நிலையில், நாளைய தினம் முதல் எதிர்வரும் 26 ஆம் திகதிவரை அந்தப் பணிகள் இடம்பெறவுள்ளன.

Leave a comment