ஐ.நா. அறிக்கையாளர் மீது நீதியமைச்சரின் கருத்து: – அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான அமைப்பு கண்டனம்

215 0

இலங்கையின் மனித உரிமை நிலைவரத்தை அம்பலப்படுத்திய ஐ.நா. அறிக்கையாளர் மீது இனவாத மற்றும் அடக்குமுறை சிந்தனை அடிப்படையிலேயே நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச கோபத்தை வெளிக்காட்டியதாக அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. இது தொடர்பில் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் ஏற்பாட்டாளர் அருட்தந்தை மாரிமுத்து சக்திவேல் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஸ்ரீலங்காவிற்கு பயணம் மேற்கொண்டிருந்த அடிப்படை சுதந்திரங்கள் மற்றும் மனித உரிமைகள் பாதுகாத்தல், ஊக்குவித்தல் தொடர்பான ஐ.நா. அறிக்கையாளர் பென் எமர்சன் அரசியல் கைதிகள் தொடர்பாகவும் ஏனைய மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பிலும் கருத்துகளை வெளியிட்டிருந்தார்.

அவற்றை நிராகரிக்கும் வகையில் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச காரமாக கருத்துக்கைளை வெளியிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை நியாயப்படுத்திய ஐ.நா. அறிக்கையாளரின் கருத்துகளுக்கு செவிமடுக்காமல் தனது இனவாத மற்றும் அடக்கு முறை சிந்தனை அடிப்படையில் நீதி அமைச்சர் கருத்துக்களை வெளியிட்டதாக அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களிடம், வன்முறையை பாவித்து குற்ற ஒப்புதல் வாக்கு மூலம் பெறப்படவில்லை என்பதையும் அவ்வாறு பெறப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்கு மூலத்தின் அடிப்படையில் அவர்கள் மீது வழக்கு தொடரப்படவில்லை என்பதையும் நீதி அமைச்சர் நிரூபிப்பாரா என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.

Leave a comment