கல்வி முன்னேற்றத்துக்காக அரும்பாடுபட்டவர் காமராஜர்: மு.க.ஸ்டாலின் புகழாரம்

2133 0

கல்வி முன்னேற்றத்துக்காக அரும்பாடுபட்டவர் காமராஜர் என தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கர்மவீரர் காமராஜரின் 115 வது பிறந்த நாளில் அவருக்கு புகழஞ்சலி செலுத்துவதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். ‘காமராஜரும், கல்வி வளர்ச்சியும்’ இணைபிரியாதவை என்று கூறும் அளவிற்கு முதல்-அமைச்சராக இருந்த போது தமிழக குழந்தைகளின் கல்வி முன்னேற்றத்திற்காக அரும்பாடுபட்டவர் பெருந்தலைவர் காமராஜர்.

தன்னிகரில்லாத அந்தத் தலைவரின் பெருமைகளை நிலைநாட்டும் வண்ணமாக 2006 சட்டமன்ற தேர்தலின் போது தி.மு.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், ‘காமராஜர் பிறந்த ஜூலை 15ஆம் தேதியைக் கல்விக் கண் திறந்த நாளாக அறிவித்துப் பள்ளிகளில் விழா எடுப்போம்’, என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதன்படி ஜூலைத் திங்கள் 15ஆம் நாளைக் ‘கல்வி வளர்ச்சி நாள்’ என அறிவித்து, கழக ஆட்சியில் 24.5.2006 அன்று அரசு ஆணை வெளியிடப்பட்டது.

காமராஜர் புகழ்பாடும் ‘கல்வி வளர்ச்சி நாளை’ யாரும் மாற்றி விடக்கூடாது என்பதை உறுதி செய்யும் பொருட்டு, அந்த அரசு ஆணையை சட்டமாகவே நிறைவேற்றியவர் தலைவர் கருணாநிதி. இந்தச் சட்டத்தின் படி முதன்முதலில் 15.7.2006 அன்று தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளில் காமராஜரின் திருவுருவப் படம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, மாணவ-மாணவியருக்குப் பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகளும், கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு, பரிசுகள் அளிக்கப்பட்டதை யாரும் மறந்திருக்க முடியாது.

அதுமட்டுமின்றி, அவ்விழாவிலேயே, ‘2 வயது முதல் 15 வயதுவரை உள்ள குழந்தைகளுக்கும், பள்ளி மாணவ- மாணவியருக்கும் சத்துணவுடன் வாரம் இரண்டு முறை முட்டை வழங்கும் திட்டம்’, கழக ஆட்சியில் தொடங்கப்பட்டதையும் தமிழகம் அறியும்.

அதனைத்தொடர்ந்து, 15.7.2007 அன்று கல்வி வளர்ச்சி நாள் நடைபெற்ற போது, ‘சத்துணவுடன் வாரம் மூன்று முறை முட்டை வழங்கும் திட்டம்’, 15.7.2008 அன்று கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்பட்டபோது, ‘முட்டை சாப்பிடாத குழந்தைகளுக்குச் சத்துணவுடன் வாரம் மூன்று முறை வாழைப்பழம் வழங்கும் திட்டம்’, அறிமுகப்படுத்தப்பட்டு பள்ளி மாணவர்களுக்கு உண்மையான ஊட்டச்சத்து வழங்கும் திட்டங்களை எல்லாம் தலைவர் கருணாநிதி கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளில்தான் தொடங்கி வைத்தார் என்பதிலிருந்தும், கழக ஆட்சி இருக்கும் போதெல்லாம் அவர் புகழுக்கு பெருமை சேர்க்கும் அடுக்கடுக்கான பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதிலிருந்தும், பெருந்தலைவர் காமராஜர் மீது தலைவர் கருணாநிதிக்கு இருக்கும் மதிப்பும், மாண்பும் வெளிப்படுகிறது.

கழக ஆட்சி இருந்தவரை ஆண்டுதோறும் ஒவ்வொரு பள்ளிக்கும் தனி நிதி ஒதுக்கீடு செய்து, கல்வி வளர்ச்சி நாள் விழாவினை சீரும் சிறப்புமாக கொண்டாடியவர் தலைவர் கருணாநிதி என்பதை நினைவு கூரும் இந்நாளில் கர்மவீரர் காமராஜரின் புகழ் மேலும் ஓங்குக என்று மனதார வாழ்த்துகிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Leave a comment