நெல்லை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் திருவனந்தபுரம் வரை இயக்கம்

360 0

திருச்சி ஜங்‌ஷனிலிருந்து புறப்படும் நெல்லை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் திருவனந்தபுரம் வரை இன்று முதல் இயக்கப்பட்டது. இதனை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பச்சைக் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

திருச்சி – நெல்லை இடையே கடந்த 2012-ம் ஆண்டு ஜூலை மாதம் 14-ந் தேதி முதல் இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் போக்குவரத்து தொடங்கி வைக்கப்பட்டது.

சரியாக 5 வருடங்களுக்கு பிறகு கன்னியாகுமரி மற்றும் கேரள மாநில மக்களும் பயன்பெறும் வகையில் திருச்சி – நெல்லை இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலை திருவனந்தபுரம் வரை நீட்டிக்க வேண்டும் என்ற பயணிகள் கோரிக்கையை ஏற்று தற்போதைய ரெயில்வே போக்குவரத்து மந்திரி சுரேஷ்பிரபு இன்று (ஜூலை 15) முதல் திருச்சி – நெல்லை இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் திருவனந்தபுரம் வரை நீட்டிக்கப்படும் என அறிவித்தார்.

அதன்படி இதன் தொடக்க விழா இன்று காலை 7 மணிக்கு திருச்சி ஜங்‌ஷன் ரெயில் நிலையத்தில் நடந்தது. விழாவில் ஜங்‌ஷன் 1-வது பிளாட்பாரத்தில் நின்ற திருச்சி – திருவனந்தபுரம் இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் போக்குவரத்தை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பச்சைக் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, அ.தி.மு.க. எம்.பி.க்கள் ப.குமார், டி.ரத்தினவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது நிருபர்களிடம் கூறிய மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், மத்திய ரெயில்வே மந்திரி சுரேஷ்பிரபு கடந்த மே மாதம் நெல்லை இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலை திருவனந்தபுரம் வரை நீட்டித்து உத்தரவிட்டார்.

அதன்படி இன்று முதல் திருச்சியிலிருந்து திருவனந்தபுரம் வரை ரெயில் போக்குவரத்து தொடங்கி வைக்கப்படுகிறது. இதனால் அதிக அளவில் பயணிகள் பயன்பெறுவார்கள். இதற்காக தமிழக மக்கள் சார்பில் மத்திய மந்திரி சுரேஷ் பிரபுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

விழாவில் ரெயில்வே மண்டல பொதுமேலாளர் ரெட்டி மற்றும் ரெயில்வே அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ரெயில் போக்குவரத்தை தொடங்கி வைத்த மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தனது சொந்த தொகுதியான நாகர்கோவிலுக்கு செல்ல அதே ரெயிலில் புறப்பட்டு சென்றார். அவரை கட்சி நிர்வாகிகள், அதிகாரிகள், பயணிகள் நன்றி தெரிவித்து வழியனுப்பி வைத்தனர்.

திருச்சி-நெல்லை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் திருவனந்தபுரம் வரை நீட்டிக்கப்பட்டதை தொடர்ந்து பயண நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி புதிய நேரம் விபரம் வருமாறு:-

திருச்சியில் இருந்து புறப்படும் நேரம் : (ரெயில் தடம் எண். 22627) காலை 7.05 மணி – திருச்சி ஜங்‌ஷன், 7.33 மணி – மணப்பாறை, 8.27 மணி – திண்டுக்கல், 9.25 மணி – மதுரை, 10.12 மணி – விருதுநகர், 10.35 மணி – சாத்தூர், 11.00 மணி – கோவில்பட்டி, 11.40 மணி – வாஞ்சிமணியாச்சி, 12.35 மணி – திருநெல்வேலி, மதியம் 1.11 மணி – வள்ளியூர், 1.55 மணி – நாகர்கோவில், 2.22 மணி – குளித்துறை, 3.25 மணி – திருவனந்தபுரம் ரெயில் நிலையம்.

திருவனந்தபுரத்திலிருந்து புறப்படும் நேரம் : (ரெயில் தடம் எண். 22628) காலை 11.55 மணி – திருவனந்தபுரம் ஜங்‌ஷன், 12.30 மணி – குளித்துறை, 12.58 மணி – நாகர்கோவில், மதியம் 1.35 மணி – வள்ளியூர், 2.40 மணி – திருநெல்வேலி, 3.06 மணி – வாஞ்சிமணியாச்சி, 3.35 மணி – கோவில்பட்டி, 3.55 – சாத்தூர், மாலை 4.20 மணி – விருதுநகர், 5.25 மணி – மதுரை, 6.22 மணி – திண்டுக்கல், 7.20 மணி – மணப்பாறை, இரவு 8.15 மணி – திருச்சி ஜங்‌ஷன்.

Leave a comment