தமிழகத்தில் இப்படியும் இருந்தார், ஒரு முதல்-அமைச்சர்

317 0

பதவியை துச்சமென மதித்து வாழ்ந்த தமிழ்த்தாய் பெற்றெடுத்த தங்கம், பாரதமே போற்றி புகழ்ந்த மாசற்ற மாணிக்கம், நேர்மையின் இருப்பிடம் என்றெல்லாம் பாராட்டப்பட்ட பாரதப் பெருந்தலைவர் காமராஜரின் 115-வது பிறந்த நாள் இன்று.

பதவியைத் துறந்த பரதனையும், இளங்கோவனையும் பாரதம் புகழ்ந்தது.

அதுபோல் பதவியை துச்சமென மதித்து வாழ்ந்த தமிழ்த்தாய் பெற்றெடுத்த தங்கம், பாரதமே போற்றி புகழ்ந்த மாசற்ற மாணிக்கம், நேர்மையின் இருப்பிடம், உண்மையின் சிறப்பிடம் என்றெல்லாம் பாராட்டப்பட்ட பாரதப் பெருந்தலைவர் காமராஜரின் 115-வது பிறந்த நாள் இன்று.

பெருந்தலைவரின் வாழ்நாளில் அவருடைய பொதுத்தொண்டு காலம் 55 ஆண்டுகள். இதில் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக 12 ஆண்டுகள். தமிழக முதல்-அமைச்சராக 9 ஆண்டுகள். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக 5 ஆண்டுகள். நாடாளுமன்ற உறுப்பினராக சுமார் 12 ஆண்டுகள். சட்டமன்ற உறுப்பினராக 16 ஆண்டுகள்.

1954-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13-ம் நாள் தமிழகத்தின் முதல்-அமைச்சராக காமராஜர் பொறுப்பேற்றுக் கொண்டார். காமராஜர் அமைச்சரவை அமைத்த விதத்தில் சில நுட்பமான விஷயங்கள் உள்ளன. மிகக்குறைந்த எண்ணிக்கையிலே (8 பேர்) அமைச்சர்கள் இருந்தனர். முதல்-அமைச்சர் பதவிக்கு தன்னை எதிர்த்து போட்டியிட்ட சி.சுப்பிரமணியம், அவரை முன்மொழிந்த எம்.பக்தவச்சலம் இருவரையுமே அமைச்சரவையில் சேர்த்திருந்தார்.

ராஜாஜி கொண்டு வந்திருந்த குலக் கல்வித் திட்டத்தினைக் கைவிட்டதும், அவர் காலத்தில் நிதி நிலையைக் காரணம் காட்டி மூடப்பட்டிருந்த 6000 பள்ளிகளைத் திறந்ததும், மேற்கொண்டு 12,000 புதிய பள்ளிகளைத் தோற்றுவித்ததும் காமராஜரின் தலைசிறந்த பணிகளாகும். அவரது ஆட்சிக் காலத்தில் தமிழகத்தின் பள்ளிகளின் எண்ணிக்கை 27,000 ஆனது.

அவரது மதிய உணவுத் திட்டம் இன்று உலக அளவில் பாராட்டப்படும் திட்டமாகும். அதன் பலனாக பள்ளிகளில் படிப்போரின் எண்ணிக்கை 37 சதவீதமாக உயர்ந்தது. (வெள்ளையர் காலத்தில் இது 7 சதவீதமாக இருந்தது) பள்ளிகளின் வேலை நாட்கள் 180-லிருந்து 200 ஆக உயர்த்தப்பட்டது.

அவரது ஆட்சியின் கீழ் 9 முக்கிய நீர்பாசனத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை கீழ் பவானித் திட்டம், மேட்டூர் கால்வாய் திட்டம், காவிரி டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம், மணிமுத்தாறு, அமராவதி, வைகை, சாத்தனூர், கிருஷ்ணகிரி, ஆரணியாறு ஆகியவையாகும்.

பாரத மிகு மின் நிறுவனம், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், மணலி சென்னை சுத்திகரிப்பு நிலையம், ரெயில் பெட்டி தொழிற்சாலை, நீலகிரி புகைப்படச் சுருள் தொழிற்சாலை, கிண்டி மருத்துவ சோதனைக் கருவிகள் தொழிற்சாலை, மேட்டூர் காகிதத் தொழிற்சாலை, குந்தா மின் திட்டம், நெய்வேலி மற்றும் ஊட்டி ஆகிய இடங்களின் வெப்ப மின் திட்டங்களும் காமராஜரால் ஏற்படுத்தப்பட்டவை.

1975 செப்டம்பர் மாதக் கடைசியில் ஒருநாள் சத்தியமூர்த்தி பவன் நிர்வாகி வள்ளியப்பனை காமராஜர் அழைத்தார்.

காங்கிரஸ் கட்சி பணம் 10 லட்சம் நம்மக்கிட்ட இருக்கு. இந்தப்பணம் மாவட்ட கமிட்டிகள் வசூல் செய்து நமக்கு அனுப்பியது. அந்த கணக்கு எல்லாம் உன்னிடம்தான் இருக்கிறது. இப்போதே கிளம்பி பணத்தை வங்கியில் கட்டிவிட்டு வந்துவிடு என்றார்.

ஊரார் தன்னை நம்பி ஒப்படைத்த பொது நிதியை வங்கி கணக்கில் வரவு வைத்துவிட்டு வர அவர் காட்டிய அவசரம் அன்று சத்தியமூர்த்தி நிர்வாகி வள்ளியப்பனுக்கு புலப்படவில்லை.

தனக்கு முடிவு நெருங்கிவிட்டது என்று அந்த உத்தமத் தலைவர் உணர்ந்து விட்டாரோ என்னவோ?

காமராஜர் தன் கையில் 10 லட்சம் ரூபாய் வைத்திருந்தார் என்னும் பாவச்சொல்லுக்கு ஆளாகி விடக்கூடாது என்று அந்த கண்ணியவான் எண்ணியிருக்க கூடும். பொதுவாழ்வில் நேர்மை என்று வாழ்ந்த அந்த உத்தமர் கடைசி நேரத்திலும் தன் கண்ணியத்தை காத்தார்.

உண்மையின் உறைவிடமாக, நேர்மையின் சிகரமாக வாழ்ந்த காந்தியின் வாரிசு 1975 அக்டோபர் 2-ல் இந்த மண்ணுலகை விட்டு விண்ணுலகில் மறைந்தார். இன்றைய நாளில் எண்ணிப்பார்ப்போம் அந்த தியாகச் செம்மலை.

Leave a comment