உலகத்தமிழர் உள்ளங்களில் நிலைத்துவாழும் ஓவியவேங்கை வீரமுத்து சந்தானம் அவர்கள்- தமிழீழ விடுதலைப் புலிகள்.

395 0

தமிழீழ உணர்வாளரும் ஓவியவேங்கையுமான வீரசந்தானம் ஐயா அவர்கள் 13.07.2017 காலமானசெய்தி தாயகத்திலும் உலகெங்கிலும் வாழும் அனைத்து தமிழ்மக்களுக்கும் துயரளிப்பதாகவே உள்ளது.
தொடக்ககாலம்முதல் தமிழீழத்தேசியத்தலைவர் அவர்களையே தனது மானசீகமான தலைவனாக ஏற்று, இறுதிவரை தமிழீழக்கனவையும் நனவையும் தன் நெஞ்சகத்தில் தாங்கிவாழ்ந்தவர் வீரசந்தானம் அவர்கள். தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் தமிழீழவிடுதலைக்கு ஆதரவாக குரலெழுப்பிவாழ்ந்த பற்றாளர். தமிழ்ச்சமூகத்தை விடுதலைக்காய் தூண்டிய செயற்பாட்டாளர். தன் இனத்தின் மீதும் மொழியின்மீதும் பண்பாட்டுக்கூறுகளின்மீதும் தீராத பற்றுக்கொண்டவராக திகழ்ந்தவர். அவரின் ஆற்றல்களும் செயற்பாடுகளும் விபரிக்கமுடியாதவை.

தமிழையும் தமிழினத்தையும் பாதுகாக்கவேண்டும் என ஒவ்வொரு நொடியும் துடித்த இதயம் அவருடையது. தமிழின உணர்வோடு வாழ்ந்ததுடன் நிற்காது, தனது ஓவியப்பணியையே ஈழத்தமிழினத்தின் உயர்வுக்காக ஒப்புவித்தவர். தமிழீழம் என்ற பெயரை உச்சரிப்பதற்கே பலரும் அஞ்சிநின்ற வேளைகளிலும், அரசுப்பணித்துறையில் அமர்ந்திருந்த அவர் அச்சமின்றி வெளிப்படையாக எம் தாயகத்தின் விடுதலைப்பண்ணிசைத்த குயிலாகத்திகழ்ந்தார். அவரின் பேச்சிலும் மூச்சிலும் வாழ்விலும் பிரிக்கமுடியாத கூறாக தமிழீழம் இருந்தது.

வீரசந்தானம் அவர்கள் சிறந்தஓவியரென அறியப்பட்டவராக இருந்தபோதும், அவருக்குள் பன்முக ஆற்றல்கள் இருப்பதை உலகறியும். அவரின் நடிப்பாற்றலை வெளிப்படுத்திய திரைப்படங்கள் பலஉண்டு. அதற்கு மகுடமிட்டது அவரின் நடிப்பில் வெளியான ‘சந்தியாராகம்’ திரைப்படம். அதில் அவர் அந்த கதைக்கேற்ற மனிதனாக வாழ்ந்தே காட்டினார் என்பதே உண்மை.

அத்தோடு முள்ளிவாய்கால் நினைவாக தஞ்சாவூரில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால்முற்றத்தில் தமிழின அழிப்பை வெளிப்படுத்தும் கருங்கற்சிற்பங்களை உணர்வுபூர்வமான முறையில் வடிவமைத்தவரும் வீரசந்தானம் அவர்களே. தமிழீழமக்கள் கண்ணீர்சிந்திக் கதறியபோதெல்லாம் வீரசந்தானம் மிகவும் துயருற்றார். தன்னலநோக்கற்று தமிழீழமக்களுக்காக பாடுபட்டார். தமிழீழம் ஒன்றே தமிழ்மக்கள் அமைதியாகவும் துயரற்றும்வாழ ஒரேதீர்வு என அவர் எப்போதும் முழங்கினார்.

2009 மே மாதத்தில் முள்ளிவாய்க்காலில் தமிழர்களின் விடுதலைப்போராட்டம் மௌனிக்கப்பட்டபோது, வீரசந்தானம் அவர்கள் மிகவும் மனம் தளர்வடைந்துபோனார். எனினும், தமிழீழம் என்ற கனவு நனவாகவேண்டும் என்கிற உறுதி அவரிடம் காணப்பட்டது. அந்த உறுதியோடு வாழ்ந்துகொண்டிருந்த அவரை இன்று இழந்துநிற்கின்றோம். காலம் அவரை எம்மிடமிருந்து பிரித்தாலும் உலகெங்கும் பரந்துவாழும் அனைத்துதமிழ்மக்களின் உள்ளங்களிலும் அவர் என்றும் வாழ்வார்.

அன்னாரைப் பிரிந்து துயருற்றிருக்கும் அவர்தம் குடும்பத்தினரிற்கும் மற்றும் அனைவருக்கும் எமது ஆறுதலை தெரிவிப்பதுடன், அவரின் உள்ளத்தில் ஒளிர்ந்த தாயகக்கனவை நனவாக்க உறுதிகொள்கின்றோம்.

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்.

அனைத்துலகத் தொடர்பகம்.
தமிழீழ விடுதலைப் புலிகள்.

அறிக்கை PDF   veera santhanam

Leave a comment