உமாஓய வேலைத் திட்டம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு செப்டம்பர் 15ம் திகதிக்கு முன் நஸ்டஈடு!

1119 0

உமாஓய வேலைத் திட்டம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு செப்டம்பர் 15ம் திகதிக்கு முன் நஸ்டஈட்டைப் பெற்றுக் கொடுக்க, நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சரவை உப குழு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளது. 

பாதிக்கப்பட்டவர்கள் குறித்த மதிப்பீட்டு நடவடிக்கைகளை ஆகஸ்ட் 1ம் திகதியுடன் நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளதாக, குறித்த அதிகாரிகள் அறிவித்துள்ளதாக, மீன்பிடி மற்றும் நீரியல் வள அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, நஸ்டஈட்டை வழங்கும் பொருட்டு, அரசாங்கத்தால் 300 மில்லியன் ரூபா மாவட்ட செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உமாஓய விவகாரம் தொடர்பில் தீர்வு வழங்க நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழு இன்று பிற்பகல் மஹாவலி அமைச்சில் சந்தித்து கலந்துரையாடினர்.

அமைச்சர் மஹிந்த அமரவீரவின் தலைமையில் இடம்பெற்ற இந்த சந்திப்பில், அமைச்சர்களான விஜித் விஜயமுனி சொய்சா, டிலான் பெரேரா, லக்ஷ்மன் செனவிரத்ன, ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க மற்றும் மஹாவலி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஏற்பட்டுள்ள நீர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில், தேவையான நீரை வழங்க ஒஹிய முதல் தியத்தலாவ வரை நாளாந்தம் இரண்டு இலட்சம் லீற்றர் நீரை ரயில் மூலம் கொண்டு செல்லவும், மேலும் 4 லீற்றர் நீரை உமா ஓய கசிவில் இருந்து பெற்றுக் கொண்டுக்கவும், வேறு இடங்களில் இருந்து பௌச்சர் மூலம் நீரை வழங்கவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், க்ரேக்வத்தையில் 50 ஏக்கர் நிலத்தை எதிர்வரும் இரு வாரங்களில் அரசுடைமையாக்கி, அதில் மக்களை மீள்குடியேற்றும் நடவடிக்கைகளையும் ஆரம்பிக்க இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, மஹிந்த அமரவீர கூறியுள்ளார்.

இதேவேளை, இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை சமர்ப்பிக்கப்படவுள்ளதோடு, அமைச்சரவை உப குழுவின் அறிக்கையும் அன்றையதினமே வழங்கி வைக்கப்படவுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a comment