தமிழ்நாட்டில் பொறியியல் கலந்தாய்வு 17-ந்தேதி தொடங்குகிறது. தமிழ்நாடு பொறியியல் கல்வி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு கால அட்டவணையை உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வெளியிட்டார்.
தமிழ்நாடு பொறியியல் கல்வி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு கால அட்டவணையை உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் நேற்று வெளியிட்டார். இதுதொடர்பாக நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி வருமாறு:-
பொறியியல் கல்வி சேர்க்கை கலந்தாய்வுக்காக வரப்பட்ட விண்ணப்பங்கள் ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 71 ஆகும். பொதுவாக அவ்வளவு பேருக்கும் கலந்தாய்வு நடத்த 35 நாட்கள் ஆகும். ஆகஸ்ட் 1-ந்தேதியன்று கல்லூரிகளை தொடங்க வேண்டும் என்று கோர்ட்டும் உத்தரவிட்டுள்ளது.
நீட் தேர்வில் பங்கேற்றவர்கள், பொறியியல் கல்வியை விட்டுவிட்டு மருத்துவக் கல்விக்கு சென்றுவிட்டால், காலியிடம் அதிகம் ஏற்படும் என்ற நிலை இருந்ததால் பொறியியல் கல்வி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தேதி தள்ளிவைக்கப்பட்டது. தற்போது நீட் தேர்வு முடிவு வழக்கில் உள்ளது.
அதுதொடர்பான முடிவு வந்த பிறகு கலந்தாய்வை முடிக்க வேண்டும் என்றால் குறுகிய கால அவகாசம்தான் கிடைக்கும். எனவே இப்போதே கலந்தாய்வு தேதிகளை அறிவிக்க இருக்கிறேன்.
அதன்படி, வருகிற 17-ந்தேதி (திங்கட்கிழமை) பொறியியல் கல்வி சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்குகிறது. தொழிற்கல்வி பிரிவு விண்ணப்பதாரர்களுக்கான கலந்தாய்வு 17-ந்தேதி அன்று நடக்கும். மாற்றுத்திறனாளிகளுக்கான கலந்தாய்வு 19-ந்தேதி நடைபெறுகிறது. விளையாட்டு பிரிவினருக்கான சான்றிதழ் சரிபார்க்கும் நாள் 19 மற்றும் 20-ந்தேதி; விளையாட்டு பிரிவினருக்கான கலந்தாய்வு 21-ந்தேதி நடைபெறுகிறது.
பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு 23.7.17 முதல் 11.8.17 வரை நடைபெறும். துணை கலந்தாய்வுக்காக விண்ணப்பம் பதிவு செய்ய வேண்டிய நாள் 16.8.17; துணை கலந்தாய்வு நாள் (ஏற்கனவே வராமல் போனவர்களுக்கு) 17.8.17; அருந்ததியினருக்கான ஒதுக்கீட்டில் நிரப்பப்படாத இடங்களில் ஆதிதிராவிட இனத்தவர்களை சேர்ப்பதற்கான கலந்தாய்வு 18.8.17 அன்று நடத்தப்படும். ஆகஸ்டு 18-ந்தேதியன்று கவுன்சிலிங் முடிவதால் செப்டம்பர் 1-ந்தேதியன்று கல்லூரிகள் தொடங்க வாய்ப்புள்ளது.
தமிழ்நாடு பொறியியல் பி.ஆர்க். கல்வி சேர்க்கைக்கான கலந்தாய்வு 19.8.17 அன்று தொடங்கும். அதற்கான மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் 10.8.17 அன்று வெளியிடப்படும்.
நாட்டா தேர்வு மூலம் தேர்ச்சி அடைந்தவர்கள் குறைவாகத்தான் உள்ளனர். மேலும் ஜெ.இ.இ. தேர்வு எழுதியவர்களும் குறைவாகவே உள்ளனர். ஆனால் பி.ஆர்க் கலந்தாய்வில் உள்ள இடங்கள் அதிகமாக உள்ளன.
எனவே பி.ஆர்க் படிப்பில் சேர்வதற்கு ஒரு தேர்வை அண்ணா பல்கலைக்கழகம் இந்த மாதத்துக்குள் நடத்த உள்ளது. இந்த தேர்வில் ஏற்கனவே நாட்டா மற்றும் ஜெ.இ.இ. தேர்வில் தோல்வி அடைந்தவர்களும் எழுதலாம். இவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள், தரவரிசை பட்டியல் வெளியிடும் தேதிக்கு முன்பு பெறப்பட்டு, அவர்களும் தரவரிசை பட்டியலில் சேர்க்கப்படுவார்கள்.
பொறியியல் கல்லூரியில் கலந்தாய்வு மூலம் சேர்ந்துவிட்டு பின்னர் மருத்துவ கல்வியில் இடம் கிடைத்து மாணவர்கள் போய்விட்டால், அந்த காலியிடத்தை நிரப்புவதற்கான சாத்தியக்கூறு இல்லை. அந்த வகையில் இந்த ஆண்டு ஆயிரம் காலியிடங்கள் ஏற்பட கூடும். எனவே இந்த நிலையை மாற்றுவதற்கான புதிய முறையை தமிழக அரசு எடுத்துள்ளது.
புதிய முறைப்படி அடுத்த ஆண்டில் இருந்து அதாவது 2018-19-ம் ஆண்டு முதல் பொறியியல் கல்வி சேர்க்கைக்கான கலந்தாய்வு இணையவழி மூலமாக நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதற்கான அனைத்து தொழில்நுட்ப ஏற்பாடுகளும் அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எனவே மாணவர்கள் தங்களின் விருப்பப் பாடம் மற்றும் கல்லூரியை அவர்களின் இருப்பிடத்தில் இருந்தபடி தெரிவு செய்துகொள்ளலாம். அதோடு, மருத்துவம் உள்பட வேறு கல்விக்கு யாரும் சென்றுவிட்டால் அதனால் ஏற்படும் காலியிடங்களை மறு கலந்தாய்வு மூலம் தெரிவு செய்துவிடலாம். பொறியியல் கல்வியை விட்டுவிட்டு செல்லும் மாணவரின் அடுத்தகட்டத்தில் உள்ள மாணவர் தானாக முந்தைய இடத்துக்கு வந்துவிடலாம். இது முற்றிலும் வெளிப்படைத் தன்மையை கொண்டது. இந்த காலியிட பிரச்சினை அடுத்த ஆண்டில் இருந்து இருக்காது.
இதில் கட்ஆப் மார்க் பிரச்சினை வராது. கிராம மாணவர்களுக்கு இணையதள கலந்தாய்வு மூலம் பிரச்சினை வராத அளவுக்கு அதற்கான வழிவகைகளை அரசு செய்து கொடுக்கும்.
கவுன்சிலிங் வருகிறவர்களுக்கு தேவையான அனைத்து தங்கும் வசதி போன்ற ஏற்பாடுகளும் செய்து தரப்பட உள்ளன. கடந்த ஆண்டும் அதுபோன்ற ஏற்பாடு செய்யப்பட்டு சின்னப் பிரச்சினை கூட வரவில்லை.
பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 583. அவற்றில் அங்கீகரிக்கப்பட்ட சீட்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 69 ஆயிரத்து 969 ஆகும். அவற்றில் கவுன்சிலிங்காக ஒரு லட்சத்து 73 ஆயிரத்து 643 இடங்கள் உள்ளன. அதில் தொழிற்கல்வி 6 ஆயிரத்து 224 இடங்கள் உள்ளன. பொதுப்பிரிவு சீட்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 419.
கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு பொறியியல் கல்விக்காக 10 ஆயிரம் பேர் கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர்.
கல்விக் கட்டணத்தை தற்போது 40 ஆயிரம் ரூபாயில் இருந்து 50 ஆயிரம் ரூபாயாகவும், ரூ.45 ஆயிரத்தில் இருந்ததை ரூ.55 ஆயிரமாகவும், நிர்வாக ஒதுக்கீட்டு சீட்டுக்கான கல்விக் கட்டணம் ரூ.70 ஆயிரத்தை ரூ.85 ஆயிரம் உயர்த்தி கல்வி கட்டணக் குழு நிர்ணயித்துள்ளது.
இந்த ஆண்டில் இருந்து புதிய கட்டணம் வசூலிக்கப்படும்.
அனைத்து அரசுத் துறைகளிலும் ஊழல் நடப்பதாக கமல்ஹாசன் கூறியுள்ளார். அவர் பேசுவதற்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் நோக்கத்தில் சிலர் பேசி வருகின்றனர்.தமிழக மக்களுக்கு இந்த அரசு பற்றி நன்றாகத் தெரியும். மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து வரும் அரசு இது. மற்றவர்கள் கூறும் தவறான கருத்துகளை யாரும் ஏற்க வேண்டாம். எந்த வித ஊழலும் செய்யாமல் மக்கள் சேவையை ஆற்றிக் கொண்டிருக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

