மருத்துவ கலந்தாய்வு தள்ளிவைப்பு: அதிகாரி தகவல்

479 4

மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. விளையாட்டு ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் சேருபவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும் என்று மருத்துவ கல்வி இயக்குனரக அதிகாரி தெரிவித்தார்.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய மருத்துவ படிப்பில் சேர தரவரிசை பட்டியல் 14-ந் தேதி வெளியிடவும், 17-ந் தேதி கலந்தாய்வு தொடங்கவும் இருந்தது. இந்த நிலையில் மருத்துவ படிப்புக்கு மாநில திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவீத ஒதுக்கீட்டை ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

இதை எதிர்த்து சில மாணவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு காரணமாக கலந்தாய்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மருத்துவ மாணவர் சேர்க்கை செயலாளர் டாக்டர் செல்வராஜ் கூறியதாவது:-

இந்த வருடம் மருத்துவ படிப்புக்கு 51 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. விண்ணப்பங்கள் பிரித்து பரிசீலனை நடந்து வருகிறது. இந்த வருடம் ரேண்டம் நம்பர் கிடையாது. காரணம் நீட் தேர்வில் உள்ள மதிப்பெண்களை பொறுத்தவரை பல டிஜிட்டல் வருகிறது. அதனால் ஒரே நம்பர் யாருக்கும் வராது.

இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிடுவதாக இருந்த தரவரிசை பட்டியல் நீதிமன்ற வழக்கு தொடர்பாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதுபோல கலந்தாய்வு தேதியும் தள்ளிப்போடப்படுகிறது.

மருத்துவ படிப்பில் சேர அண்ணா பல்கலைக்கழகம் விளையாட்டு வீரர்களுக்கு தரவரிசை பட்டியல் இன்னும் வெளியிடவில்லை. மருத்துவ மாணவர் சேர்க்கையில் 3 இடங்கள் விளையாட்டு வீரர்களுக்கு உண்டு. அந்த வீரர்கள் ரேங்க் பட்டியலில் முதல் 3 இடங்களை பிடித்து இருப்பார்கள். அதே நேரத்தில் அவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று தகுதி பெற்றிருக்கவேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a comment