நெடுந்தீவு அருகே மண்டபம் மீனவர்கள் 7 பேர் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படை நடவடிக்கை

30583 0

நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த மண்டபம் மீனவர்கள் 7 பேர் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் ராமேசுவரம் மற்றும் மண்டபம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ராமேசுவரம், மண்டபம், பாம்பன் மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் 300 விசைப்படகுகளில் கடலுக்கு சென்றனர்.

இவர்களில் ஒரு தரப்பினர் நெடுந்தீவு அருகே வலைகளை விரித்து மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது 5-க்கும் மேற்பட்ட சிறிய ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களிடம் இங்கு வந்து மீன் பிடிக்கக்கூடாது. உடனே செல்லுங்கள் என்று மிரட்டினார்கள்.

மேலும், கடற்படை வீரர்கள் மீனவர்களின் படகுகளில் ஏறி அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்கள், வலைகள், மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தி கடலில் வீசினர். சில மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

தொடர்ந்து எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி மண்டபத்தைச் சேர்ந்த சேகு (வயது 52), ரவுதர் (40), தவசி (58), ஈஸ்வரன் (45), யோகன் (35), நாகராஜன் (30), சதீஷ் (40) ஆகிய 7 மீனவர்களையும், அவர்கள் வந்த ஜலாலூதின், சதாசிவம் என்பவர்களுக்கு சொந்தமான 2 விசைப்படகுகளையும் சிறைப் பிடித்துச் சென்றனர். மீனவர்கள் காங்கேசன் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இன்று ஊர்க்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்ட சம்பவம் ராமேசுவரம் மற்றும் மண்டபம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.ஏற்கனவே இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க கோரி கடந்த வாரம் வேலை நிறுத்த போராட்டம் நடந்தது. நேற்று முன்தினம் போராட்டம் வாபஸ் பெறப்பட்டு மீனவர்கள் கடலுக்கு சென்ற நிலையில் 7 பேர் சிறை பிடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Leave a comment