அமெரிக்க தேர்தலின் போது ரஷ்ய வக்கீலை சந்தித்தது தொடர்பான இ-மெயில்களை வெளிட்ட டிரம்ப் மகன்

387 0

அமெரிக்க அதிபர் தேர்தலின் போது ரஷ்யாவைச் சேர்ந்த வக்கீலை சந்தித்தது தொடர்பான இ-மெயில் விவரங்களை டொனால்ட் டிரம்ப் மகனான ஜான் டிரம்ப் வெளியிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றார். தேர்தலில் டிரம்ப் வெற்றி பெறுவதற்காக ரஷியாவின் தலையீடு இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுபற்றி அமெரிக்க புலனாய்வுத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தநிலையில் டிரம்பின் மகன் ஜான் டிரம்ப், ரஷிய அதிபர் கிரம்ளின் மாளிகையுடன் தொடர்புடைய ஒரு வக்கீலை சந்தித்து பேசியதை ஒப்புக் கொண்டதாக அமெரிக்காவின் பிரபல நாளிதழான நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டனின் செல்வாக்கை சேதப்படுத்தும் விதமாக தகவல்களை வெளியிடுவதாக ரஷிய வக்கீல் நடாலியா என்பவர் அளித்த உறுதிமொழியை தொடர்ந்து அவரை ஜான் டிரம்ப் சந்தித்துள்ளார்.

அப்போது டிரம்ப்பின் தேர்தல் பிரசாரக் குழு தலைவர் பால் மனாபோர்ட், டிரம்பின் மருமகன் ஜேரட் குஷ்னர் ஆகியோரும் உடன் இருந்துள்ளனர் எனவும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாக ரஷிய வக்கீலை நியூயார்க் நகரில் உள்ள டிரம்ப் டவரில் கடந்த ஆண்டு ஜூன் 6-ந் தேதி சந்தித்ததை ஜான் டிரம்ப் ஒப்புக் கொண்டதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், அந்த சந்திப்பு தொடர்பான இ-மெயில் தகவல்களை ஜான் டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், அதிபர் தேர்தல் தொடர்பாக சந்திப்பின் போது எதுவும் பேசவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

ஜான் டிரம்பின் இந்த செயலுக்கு அவரது தந்தை டொனால்ட் டிரம்ப் பாராட்டு தெரிவித்துள்ளார். மிகவும் வெளிப்படையான அனுகுமுறை என தனது பாராட்டில் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment