கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் செயல்படும் மகளிரியல் துறைகளை மூடக்கூடாது: திருமாவளவன்

346 0

இந்தியா முழுவதும் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைகழகங்களில் செயல்பட்டு வரும் மகளிரியல் துறைகளை மூடக்கூடாது என தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

இந்தியா முழுவதும் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைகழகங்களில் செயல்பட்டு வரும் மகளிரியல் துறைகளை 2017 செப்டம்பர் மாதத்தோடு மூடிவிடுவதென்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்துப் பல்கலைகழக மானியக்குழு (யு.ஜி.சி) ஆணை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

மத்திய அரசின் இந்த முடிவை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். மகளிரியல் துறைகளைத் தொடர்ந்து செயல்பட அனுமதிக்குமாறு மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.

ஆனால் சில நாட்களுக்கு முன்னால் திடீரென 2017 செப்டம்பரோடு இந்தத் திட்டங்களுக்கான நிதி நிறுத்தப்படும் என அது அறிவித்துள்ளது. இதனால் இந்தியா முழுவதும் உள்ள மகளிரியல் துறைகள் மூடப்படும் அபாயம் எழுந்துள்ளது.

தமிழ்நாட்டில் 26 இடங்களில் மகளிரியல் துறைகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் ஏராளமான ஆராய்ச்சி மாணவர்கள் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். அதுபோலவே முதுநிலை பட்டப்படிப்பு மாணவர்களும் கல்வி பயின்று வருகின்றனர். அவர்களது எதிர்காலம் இப்போது கேள்விக்குறியாகியுள்ளது. இங்கு பணிபுரியும் ஆசிரியர்களின் வேலையும் பறிபோகக் கூடிய ஆபத்து உருவாகியுள்ளது.

தமிழகத்தில் செயல்பட்டு வரும் மகளிரியல் துறைகளை நேரடியாக பல்கலைக்கழகங்களின் துறைகளாக மாற்றுவதற்கு தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதுபோலவே இந்தியாவெங்கும் உள்ள மகளிரியல் துறைகள் பல்கலைக்கழகங்களோடு இணைக்கப்படும் வரை அவற்றுக்கு வழங்கப்பட்டு வரும் நிதியை யுஜிசி நிறுத்தக்கூடாது.

மகளிரியல் துறைகள் மூடப்படுவது வெறுமனே நிதிசார்ந்த பிரச்சனை அல்ல. அது மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசின் மகளிர் விரோதக் கொள்கையின் வெளிப்பாடாகும். இதை எதிர்த்துக் குரல் கொடுப்பதற்கு ஜனநாயக சக்திகள் முன்வர வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம்.இவ்வாறு தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

Leave a comment