மாவட்ட நீதிபதிகளை மத்திய அரசு நியமிக்கும் முயற்சியை தடுக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

400 0

மாவட்ட நீதிபதிகளை மத்திய அரசு நியமிக்கும் முயற்சியை தடுக்க வேண்டும் என தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

மத்திய அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கு நீட் தேர்வு இருப்பது போல, மாவட்ட அளவிலும், அதற்குக் கீழ் இருக்கக்கூடிய நீதித்துறை நியமனங்களில், நீட் தேர்வைப் போலவே அகில இந்திய அளவிலான தேர்வு முறையைக் கொண்டு வருவதற்கு மத்திய அரசு எல்லா வகைகளிலும் முயற்சிகளை செய்து கொண்டிருக்கிறது.

அரசியல் சட்டத்தின் 6வது அத்தியாத்தில் உள்ள 233 முதல் 237 வரையிலான பிரிவுகள், மாவட்ட அளவிலும் அதற்குக் கீழுள்ள நீதிமன்றங்களிலும் நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரத்தை உச்ச நீதிமன்றத்துக்கும், அரசாங்கத்துக்கும் வழங்குகின்றன. அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வுகளை நடத்தி, கீழ் நீதிமன்றங்களுக்கு இதுவரையிலும் நீதிபதிகள் தேர்வை செய்து வந்தன.

ஆனால், மத்திய சட்ட இலாகாவில் நீதித்துறையை கவனித்து வரும் செயலாளர், உச்சநீதிமன்றத்துக்கு எழுதி இருக்கும் கடிதத்தில், ‘அகில இந்திய அளவில், மாவட்ட அளவிலான நீதிபதிகளையும் தேர்வு செய்யலாம்’, என்று பரிந்துரை செய்திருக்கிறார். இந்தப் பரிந்துரையின் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசின் இந்த முயற்சி கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிராக அமைந்திருக்கிறது.

ஏற்கனவே, பா.ஜ.க. ஆண்டு கொண்டிருக்கும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட 7 மாநிலங்களில், அகில இந்திய அளவில் நீதிபதிகளைத் தேர்வு செய்யும் முயற்சித்து, உச்சநீதிமன்றத்தில் அபிடவிட் தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாக செய்திகள் வந்திருக்கின்றன. ஆகவே, நீதித்துறை நிர்வாகத்தில் மாநில அரசுக்கு இருக்கக்கூடிய உரிமையை பறிக்கக்கூடிய வகையில், இந்தத் தேர்வுமுறையை மத்திய அரசு புகுத்த நினைப்பது, மாநில சுயாட்சிக் கொள்கைக்கு முற்றிலும் விரோதமாக அமைந்து விடும்.

எனவே, நான் இந்த அரசை கேட்க விரும்புவது, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கும், சென்னை உயர் நீதிமன்றத்துக்கும் இருக்கும் நீதித்துறை நியமன அதிகாரங்களைப் பறிக்கும் விதத்தில் இது அமைந்திருக்கிறது என்பதால், கீழமை நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் அகில இந்திய தேர்வு தேவையில்லை என்றக் கருத்தை மத்திய அரசுக்கு, தமிழக அரசு அழுத்தத்தைத் தரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

அதேநேரத்தில், மாநிலத்தில் உள்ள கீழமை நீதி மன்றங்களில் நீதிபதிகளை தேர்வு செய்ய அகில இந்திய தேர்வுகள் தேவையில்லை என்பதை மூத்த வழக்கறிஞர்கள் மூலமாக மாநில அரசு முறைப்படி உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்.

நீட் தேர்வு நடத்தி மருத்துவக் கல்லூரியில் சேர்க்கக்கூடிய மாநில அரசின் உரிமை பறிபோகிறது. இப்போது கீழமை நீதிமன்றங்களுக்கும் அகில இந்திய தேர்வு கொண்டு வந்து மாநில உரிமைகள் பறிக்கப்படுகிறது.

மாநில அரசு என ஒன்று இருப்பதையே மத்திய அரசு அங்கீகரிக்காமல், இதுபோன்ற அதிகாரப் பறிப்புகளில் முனைப்புக் காட்டுவது, கூட்டாட்சித் தத்துவத்துக்கு விரோதமாக அமைந்து விடும். எனவே, உச்சநீதிமன்றத்தில் மற்ற 7 மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து இருப்பதைப் போல, நம்முடைய தமிழக அரசும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உடனடியாக அபிடவிட் தாக்கல் செய்ய வேண்டும் என்று கேட்டு, அதேநேரத்தில், இதுபற்றி சட்டமன்றத்தில் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்து மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று நான் தங்கள் மூலமாக, இந்த அரசையும், முதல்வரையும் கேட்டு அமைகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment