இந்தியாவில் சிகிச்சை பெற அனுமதி மறுப்பு: சுஷ்மாவிடம் பாக். பெண் கோரிக்கை

272 0

பாகிஸ்தானைச் சேர்ந்த ஃபைஷா தன்வீர் என்ற இளம் பெண்ணுக்கு இந்தியாவில் சிகிச்சை பெற அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து, அனுமதி வேண்டி சுஷ்மாவிடம் பாகிஸ்தான் பெண் கோரிக்கை விடுத்துள்ளார்.

கேன்சர் நோயால் அவதிப்பட்டு வரும் பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் ஒருவர், இந்தியாவில் சிகிச்சை பெற அனுமதி கேட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இந்தியா வருவதற்கான தனது விசா ரத்து செய்யப்பட்டதாகக் கூறி, தனக்கு அனுமதி அளித்து தன்னை காப்பாற்றுங்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
ஃபைஷா தன்வீர் என்ற 25 வயது இளம்பெண், அமலோபாஸ்டோமா என்னும் வாய்வழி கட்டியால் அவதிப்பட்டு வருகிறார்.
இந்த வாய்வழிக்கட்டிக்கு இந்தியாவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால், இந்தியா வருவதற்கான முயற்சியில் ஈடுபட்டார். அதற்காக காசியாபாத்தில் உள்ள இந்திரபிரஸ்தா பல் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற முடிவு செய்து, அதற்காக ரூ.1 லட்சம் பணத்தை தன்வீர் முன் பணமாக கட்டியுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இருநாட்டுக்கிடையேயான உறவு மோசமடைந்து இருப்பதாகக் கூறி தன்வீரின் இந்திய பயணத்துக்கு இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகம் அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து தனது உயிரை காப்பாற்றக் கோரி சமூக வலைதளத்தின் மூலம் இந்திய அதிகாரிகளுக்கு அவர் கோரிக்கை விடுத்திருக்கிறார்.
அதில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தலையிட்டு, தனக்கு சிகிச்சை அளிக்க வகை செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார். மேலும் கேன்சரால் பாதிக்கப்பட்ட தனது புகைப்படம் மற்றும் வீடியோவையும் அதில் பகிர்ந்துள்ளார். முன்னதாக கடந்த மாதம் சுஷ்மா ஸ்வராஜின் தலையீட்டால், பாகிஸ்தான் குழந்தைக்கு இருதய அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a comment