பனமா கேட் ஊழல் விசாரணை முடிவு: பாகிஸ்தானில் பதற்றம்

330 0

பனாமா கேட் ஊழல் வழக்கு விசாரணை முடிந்து விட்டதால், விரைவில் அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. இதனால் பாகிஸ்தானில் பதற்றம் நிலவி வருகிறது.

பாகிஸ்தானில் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது எழுந்துள்ள ‘பனாமா கேட்’ ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து சிறப்பு கூட்டு புலனாய்வுக்குழு அமைத்து விசாரணை நடத்த கடந்த மே மாதம் பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, பாகிஸ்தான் மத்திய புலனாய்வு அமைப்பான எப்.ஐ.ஏ.யின் கூடுதல் தலைமை இயக்குனர் வாஜித் ஜியா தலைமையில் 6 உறுப்பினர்களைக் கொண்ட கூட்டு புலனாய்வுக்குழு விசாரணை நடத்தி வருகிறது.
இந்த குழு முன்பாக நவாஸ் ஷெரீப், அவரது இரு மகன்கள், மகள் மற்றும் அவரது குடும்பத்தினர் பலரும் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். அதேபோல் நவாஸ் ஷெரீப்புக்கு நெருக்கமானவர்கள் மற்றும் அதிகாரிகள் சிலரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
இதில் நவாசுக்கு நெருக்கமானவர்கள் அனைவரிடமும் விசாரணை முடிந்தது. விசாரணைக்கு உச்சநீதிமன்றம் அளித்த 60 நாள் கொடு முடிவதால், வருகிற ஜுலை 10-ஆம் தேதி கூட்டு புலனாய்வுக்குழுவின் அறிக்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பாகிஸ்தானில் பதற்றம் நிலவி வருகிறது.
பனாமா நாட்டில் உள்ள புகழ்பெற்ற, ‘மொசாக் பொன்சேகா’ சட்ட நிறுவனத்தின் உதவியுடன், பல்வேறு நாடுகளின் முக்கிய பிரமுகர்கள், வெளிநாடுகளில் சட்ட விரோதமாக முதலீடு செய்துள்ளனர். இதுதொடர்பான ஆவணங்கள், பனாமா பேப்பர்ஸ் என்ற பெயரில் வெளியானது. அந்த பட்டியலில் நவாஸ் ஷெரீப்பின் பெயரும் இருந்ததால், அவருக்கு எதிராக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a comment