சமூக வலைத்தளங்கள் மூலம் பெண் என்ஜினீயரை காப்பாற்ற 3 நாளில் ரூ.42 லட்சம் குவிந்தது

518 0

ரத்த புற்று நோயால் உயிருக்குப் போராடி வரும் பெண் என்ஜினீயரை காப்பாற்ற, சமூக வலைத்தளங்கள் மூலம் 3 நாளில் ரூ.42 லட்சம் குவிந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையைச் சேர்ந்த பெண் என்ஜினீயர் பிரீத்தி (26). இவரது கணவர் கோபிநாதன். இவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்தது. இந்த தம்பதிக்கு ஒரு வயதில் குழந்தை இருக்கிறது.

சமீபத்தில் குழந்தைக்கு முதல் பிறந்த நாளை பிரீத்தி கொண்டாடினார். அழகான ஒரு குழந்தையின் தாய். அன்பான கணவருக்கு மனைவி. குடும்பத்தில் எல்லோரது அன்பையும் பெற்றவர். சிறந்த நட்பு வட்டாரத்தை கொண்டவர் என்று பாராட்டப்படும் பிரீத்தியை இவ்வளவு சிறிய வயதில் இவ்வளவு பெரிய சோகம் சூழும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

25 நாட்களுக்கு முன்பு உடல் நலம் இல்லாமல் ஆஸ்பத்திரிக்கு சென்ற பிரீத்தியின் உடல்நிலையை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு ரத்த புற்று நோய் இருப்பதும் அதுவும் 4-வது கட்டத்தை அடைந்திருப்பதையும் பார்த்து திடுக்கிட்டனர்.

போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள பிரீத்திக்கு மருத்துவ செலவு ரூ.35 முதல் 40 லட்சம் வரை ஆகும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த அவர்கள் செலவு தொகையை கேட்டதும் ஆடிப் போனார்கள். இவ்வளவு தொகைக்கு எங்கே போவது? பிரீத்தியின் நிலைமையை பார்த்து நண்பர்கள் சிலர் முகநூல் மூலம் நிலைமையை பகிர்ந்தனர். அதை பார்த்து ரூ.5 லட்சம் வசூலானது.

பிரீத்தியின் புகைப்படத்தை வலைத்தளத்தில் பார்த்த சக்திவேல் பன்னீர் செல்வம் திடுக்கிட்டு போனார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளான இவர் சில தினங்களுக்கு முன்பு பிரீத்தி தனது குழந்தைக்கு பிறந்த நாள் கொண்டாடியதை பார்த்திருந்தார். அடுத்த சில நாட்களிலேயே அவர் படுத்த படுக்கையாகி விட்டதை பார்த்து வேதனைப்பட்டார்.

கடந்த 5-ந்தேதி பல சமூக வலைத்தளங்களில் உருக்கமாக பதிவிட்டார். ஆர்.ஜே.பாலாஜியும் இந்த பதிவை பகிர்ந்தார். பிரீத்தியின் உயிரை காப்பாற்ற உலகம் முழுவதிலும் இருந்து உதவி கரங்கள் நீண்டது. 3 நாட்களில் ரூ.42 லட்சம் நிதி குவிந்தது. ரூ.500 முதல் ரூ.15 ஆயிரம் வரை தங்களால் முடிந்த உதவியை ஒவ்வொருவரும் செய்துள்ளனர்.

அதிக அளவில் ரத்தம் தேவைப்பட்டபோது அதை விட அதிகமாக குருதி கொடையாளர்கள் ஆஸ்பத்திரியில் திரண்டு விட்டனர்.சமூக வலைத்தளங்கள் மூலம் உதவிக்கு கை கொடுக்க ஓராயிரம் என்ன ஒரு லட்சம் பேர் கூட இருக்கிறார்கள் என்பது சென்னை வெள்ளத்தின் போது தெரிந்தது. இப்போது பிரீத்தி வி‌ஷயத்திலும் அது வெளிப்பட்டுள்ளது.மருத்துவ உலகம் பேராடுகிறது. பிரீத்தி மீண்டுவர மக்கள் பிரார்த்திக்கிறார்கள். இனி…. இறைவன்தான் மனம் இரங்க வேண்டும்

Leave a comment