தமிழகத்தில் பெட்ரோல் பங்குகள் 12-ந்தேதி வழக்கம் போல் திறந்திருக்கும்

407 0

தமிழகத்தில் பெட்ரோல் பங்குகள், 12-ந்தேதி வழக்கம்போல் திறந்திருக்கும் என்று பெட்ரோல்-டீசல் விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் பெட்ரோல் பங்குகள், 12-ந்தேதி வழக்கம்போல் திறந்திருக்கும் என்று பெட்ரோல்-டீசல் விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தின் அடிப்படையில், பெட்ரோல்-டீசல் விலையை 15 நாட்களுக்கு ஒரு முறை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வந்தன.
இதற்கிடையே பெட்ரோல்-டீசல் விலையை தினமும் மாற்றியமைக்கும் முறை கடந்த மாதம் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு நாளும் ஏறி, இறங்கும் விலைக்கு ஏற்ப தற்போது பெட்ரோல்-டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நாள்தோறும் பெட்ரோல்-டீசல் விலையை நிர்ணயம் செய்வதால் தங்களுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படுவதாக கூறி ஜூலை 12-ந் தேதி நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்போவதாகவும், அன்றைய தினம் எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து பெட்ரோல்-டீசல் கொள்முதல் செய்வதும் இல்லை, விற்பனை செய்யப்போவதும் இல்லை என்று அகில இந்திய பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இந்தநிலையில், அகில இந்திய பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ள போராட்டத்தில் தமிழ்நாடு பெட்ரோல்-டீசல் விற்பனையாளர்கள் சங்கம் பங்கேற்கப்போவதில்லை என்றும், அன்றைய தினம் தமிழகத்தில் வழக்கம்போல் பெட்ரோல் பங்குகள் திறந்திருக்கும் என்றும் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வாகன ஓட்டிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு பெட்ரோல்-டீசல் விற்பனையாளர்கள் சங்கத்தின் தலைவர் கே.பி.முரளி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
எண்ணெய் நிறுவனங்களோடு, தமிழ்நாடு பெட்ரோல்-டீசல் விற்பனையாளர்கள் சங்கம் மற்றும் பெட்ரோல்-டீசல் விற்பனையாளர்கள் சங்கத்தின் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து வருகிற 28-ந்தேதியன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளன. இந்த பேச்சுவார்த்தையின்போது, எண்ணெய் நிறுவனங்களின் செயல் இயக்குனர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுவோம்.
பெட்ரோல்-டீசல் விற்பனையாளர்களின் கோரிக்கைகளை, மத்திய மந்திரி ஏற்றுக்கொள்ளும் சூழல் இருப்பதாக எண்ணெய் நிறுவனங்களை சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பெட்ரோல்-டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயம் செய்வதால் ஏற்படும் இழப்புகள் குறித்து கணக்கிட்டு, மாவட்ட அளவில் கூட்டம் நடத்தி அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அறிவிக்கப்படும். அதேசமயத்தில் ஆகஸ்டு 1-ந்தேதி வரைதான் எங்களுடைய கோரிக்கைகளுக்காக காத்திருப்போம்.
அதற்குள் எந்த போராட்டத்திலும் நாங்கள் பங்கேற்கப்போவது இல்லை. ஆகையால் அகில இந்திய பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் 12-ந்தேதி அறிவிக்கப்பட்டுள்ள போராட்டத்தில், தமிழ்நாடு பெட்ரோல்-டீசல் விற்பனையாளர்கள் சங்கம் பங்கேற்கவில்லை. அன்றைய தினம் வழக்கம்போல் தமிழக முழுவதும் பெட்ரோல் பங்குகள் திறந்திருக்கும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a comment