மன்னார் மாவட்டத்தில் வீதி அபிவிருத்தி பணிகள் ஆரம்பம்

263 0

வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் 2017 ம் ஆண்டுக்கான குறித்தொதுக்கப்பட்ட மாகாண அபிவிருத்தி நன்கொடை நிதியிலிருந்து மாகாணசபை உறுப்பினர்களினால் பரிந்துரைக்கப்பட்ட இரண்டு வீதிகளும் அமைச்சரின் அறிவுறுத்தலுக்கமைய ஒரு வீதியும் புனரமைப்பதற்கான வேலைத்திட்டங்களை 03.07.2017 திங்கட்கிழமை வடமாகாண மீன்பிடி, போக்குவரத்து, கிராம அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.

இவ்வருடம் அமைச்சர் அவர்களினால் முதலமைச்சர், எதிர்கட்சி உறுப்பினர்கள் உட்பட மாகாணசபையில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் வீதி அபிவிருத்திக்காக தலா 5 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டு அவர்களின் பரிந்துரைக்கு அமைவாக வீதிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

மேற்படி வேலைத்திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்ட வீதிகளில் எருக்கலம்பிட்டி – ஆமைப்படுக்கை வீதியானது வடமாகாண சபை உறுப்பினர்கள் கௌரவ அயூப் அஸ்மின் மற்றும் கௌரவ ஹபீபு முகமது ரைஸ் ஆகியோரின் பரிந்துரையில் அவர்கள் இருவருக்கும் ஒதுக்கப்பட்ட 10 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டில் 763 மீட்டர் வீதி புனரமைக்கப்படவுள்ளன.

மேலும் பள்ளிமுனை மன்/லூசியா மகாவித்தியாலயத்தின் உள்ளக வீதியானது அமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைவாக வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் பராமரிப்பு நிதியில் இருந்து 2 மில்லியன் ஒதுக்கீட்டில் 230 மீட்டர் வீதியானது அமைப்பதற்க்கான வேலைத்திட்டமும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மேலும் மடுக்கரை வீதியானது வடமாகாண சபை உறுப்பினர்கள் கௌரவ பிரிமூஸ் சிறாய்வா மற்றும் கௌரவ வைத்தியகலாநிதி ஞானசீலன் குணசீலன் ஆகியோரின் பரிந்துரையில் அவர்கள் இருவருக்கும் ஒதுக்கப்பட்ட 10 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டில் 700 மீட்டர் வீதி புனரமைக்கப்படவுள்ளன.

குறித்த மடுக்கரை வீதியானது பஸ் போக்குவரத்து சேவை வழங்குவதற்கு ஏற்புடைய வீதியாக இல்லாதபடியால் பாடசாலை செல்லும் மாணவர்கள் பாடசாலை செல்லமுடியாது கஷ்டப்படுவதாக மன்/நானாட்டான் மகா வித்தியாலய அதிபர் அருட்சகோதரர் எஸ்.சி.விஜயதாசன் அவர்கள் கடந்த காலங்களில் அமைச்சர் அவர்களின் கவனத்துக்கு கொண்டுவந்ததினையடுத்து அவ்வீதியானது தற்காலிகமாக பஸ் போக்குவரத்துக்கு உகந்ததாக மாற்றிக்கொடுத்ததுடன் விரைவில் அவை புனரமைக்கப்படும் எனவும் அமைச்சர் உறுதியளித்திருந்தார், அதன் தொடர்ச்சியாக தற்பொழுது வீதி அபிவிருத்தி திணைக்களத்துக்கு சொந்தமான 700 மீட்டர் வீதி புனரமைக்கப்படுவதுடன் மீதமுள்ள 300 மீட்டர் வீதியானது விரைவில் புனரமைக்கப்படும் அல்லது அடுத்த வருட திட்டத்திலாவது புனரமைக்கப்படும் என அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.

Leave a comment