குடியிருப்பு பகுதிகளில் மதுபான கடைகளை தமிழக அரசு திறக்கக்கூடாது: ஓ.பன்னீர்செல்வம்

212 0

குடியிருப்பு பகுதிகளில் மதுக்கடைகள் திறக்கும் முடிவை அரசு கைவிட்டு, சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறி உள்ளார்.

அ.தி.மு.க. (புரட்சி தலைவி அம்மா) அணியின் பொருளாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக மக்களின் விருப்பத்தை ஏற்று, படிபடியாக மது விலக்கை கொண்டு வருவோம் என்று கடந்த 2016-ம் ஆண்டு, நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாக்குறுதி அளித்தார்.

தமிழக மக்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள். அந்த மகிழ்ச்சி தொடரும் என்று நம்பிக்கையோடு இருக்கிறார்கள். ஜெயலலிதா நம்மை விட்டு மறைந்தாலும், அந்த நம்பிக்கை மறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும்.

புதிதாக மதுக்கடைகளை மக்கள் குடியிருக்கும் பகுதிகளில் திறக்கக் கூடாது. ஆனால் மதுக்கடைகள் திறக்கப்படுவதும், காவல்துறையினரின் அத்துமீறல்களும் தொடர்ந்து கொண்டிருப்பது மிகவும் கவலைக்குரியதாக உள்ளது. மது இல்லாத தமிழகத்தை படிப்படியாக உருவாக்குவோம் என்ற ஜெயலலிதாவின் கொள்கையை நிறைவேற்றுவது அரசின் கடமையாக கருத வேண்டும். எனவே குடியிருப்பு பகுதிகளில் மதுக்கடைகள் திறக்கும் முடிவை கைவிட்டு, சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

Leave a comment