ஜெர்மனியில் ஜி 20 மாநாடு இன்று தொடக்கம்: பிரதமர் மோடி – சீன அதிபர் சந்திப்பு இல்லை

288 0

ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் இன்று தொடங்கும் ஜி 20 மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங்கை சந்திக்கும் திட்டம் எதுவும் இல்லை என மத்திய அரசு கூறியுள்ளது.

சிக்கிம் மாநில எல்லையில், இந்தியா-சீனா-பூடான் நாடுகளின் எல்லைகள் சங்கமிக்கும் முச்சந்திப்பான டோகா லா பகுதியை ஆக்கிரமித்துள்ள சீனா, அங்கு சாலை அமைக்கும் பணிகளை மேற்கொண்டது. இதை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தியதால் ஆத்திரமடைந்த அந்த நாடு, இந்திய ராணுவத்தின் 2 பதுங்கு குழிகளை அழித்தது.

சீனாவின் இந்த அத்து மீறல்களுக்கு பதிலடியாக இந்தியா, சுமார் 3 ஆயிரம் வீரர்களை அங்கே குவித்து உள்ளது. இந்திய ராணுவத்தை அங்கிருந்து விலக்கிக்கொள்ளுமாறு தொடர்ந்து வலியுறுத்தி வரும் சீனா, தவறும் பட்சத்தில் ராணுவ நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் இந்தியாவின் வடகிழக்கு எல்லையில் போர்பதற்றம் நீடித்து வருகிறது.

இந்த நிலையில் ஜி20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் மாநாடு இன்றும் (வெள்ளிக்கிழமை), நாளையும் ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி ஜெர்மனி சென்றுள்ளார். இந்த மாநாட்டுக்கு இடையே அவர் பல்வேறு நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேசுகிறார். மேலும் பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பு நாடுகளின் தலைவர்களையும் சந்திக்கிறார்.

இந்த பிரிக்ஸ் மற்றும் ஜி20 அமைப்புகளில் சீனாவும் உறுப்பு நாடாக இருப்பதால் இந்த மாநாட்டின் போது இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தி சிக்கிம் பிரச்சினைக்கு தீர்வு காணக்கூடும் என தகவல் வெளியானது.

ஆனால் ஜி20 மாநாட்டுக்கு இடையே மோடி-ஜின்பிங் சந்தித்து பேசும் திட்டம் இல்லை என மத்திய அரசு விளக்கம் அளித்து உள்ளது. இது குறித்து வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் கோபால் பார்க்லே கூறுகையில், ‘ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை ஹம்பர்க் நகரில் தங்கியிருப்பார். இந்த மாநாட்டின் இடையே அர்ஜென்டினா, கனடா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, கொரியா, இங்கிலாந்து மற்றும் வியட்நாம் நாட்டு தலைவர்களை மோடி சந்தித்து பேச திட்டமிடப்பட்டு உள்ளது’ என்றார்.

அத்துடன் பிரிக்ஸ் தலைவர்களின் கூட்டத்தில் மோடி பங்கேற்கும் திட்டத்திலும் மாற்றம் இல்லை என்று கூறிய பார்க்லே, ஆனால் சீன அதிபர் ஜின்பிங்குடன் இரு தரப்பு சந்திப்பு குறித்த எந்த திட்டமும் இல்லை என்று தெளிவு பட கூறினார்.

முன்னதாக, இந்திய பிரதமர் மோடியை, ஜின்பிங் சந்திப்பதற்கு உகந்த சூழல் தற்போது இல்லை என சீனாவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. சிக்கிம் எல்லையில் இருந்து இந்தியா தனது படைகளை திரும்ப பெற்றால் மட்டுமே இரு தரப்புக்கு இடையே அர்த்தமுள்ள அமைதி பேச்சுவார்த்தை நடத்த முடியும் என சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஜென் சுயாங்க் கூறினார்.

Leave a comment