முதலில் இங்கு அதிகளவாக நிலை கொண்டுள்ள கடற்படை மற்றும் இராணுவத்தினர் வெளியேற்றப்பட வேண்டும் – பெண் தலமைத்துவ குடும்பங்கள்

383 0

Sivapuram-Vavuniya-e1435274815403வடமராட்சி கிழக்குப் பகுதி வீட்டில் தாய்மையடைந்த பெண் கூட தனிமையில் இருக்க முடியாத அவல நிலமையே காணப்படுகின்றது என்று நல்லிணக்க பொறிமுறைகள் தொடர்பான கலந்துரையாடல்களை மேற்கொள்ளும் செயணியிடம் அப்பகுதியில் உள்ள பெண் தலமைத்துவ குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இங்கு அதிகளவில் நிலை கொண்டுள்ள கடப்படை மற்றும் இராணுவத்தினர் வெளியேற்றப்பட்டு, இலஞ்சம் வாங்காத பொலிஸார் கடமைக்கு அமர்த்தப்பட்டாலே வடமராட்சி கிழக்கில் உள்ள பொது மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்றும் அவர்கள் செயலணியிடம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.நல்லிணக்க பொறிமுறைகள் தொடர்பான கலந்துரையாடல்களை மேற்கொள்ளும் செயலணியின் அமர்வு மருதங்கேணி பிரதேச செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதில் அப்பகுதியில் பெண்களைத் தலமைத்துவமாகக் கொண்டவர்களும் கலந்து கொண்டு கருத்துக்களை வெளியிட்டிருந்தனர்.

அவர்கள் தமது நிலைப்பாடு தொடர்பாக தெரிவிக்கையில்:- தந்தையர்கள் அற்ற நிலையில் வளரும் பிள்ளைகள் சமூகத்தில் பெரும் பாதிப்புக்களை எதிர் கொள்ளுகின்றார்கள். பெரும் பாலும் இங்குள்ள பெண்களை தலமைத்துவமாகக் கொண்ட குடும்பங்கள் உருவாதற்கு காரணம் அவர்கள் காணாமல் போகச் செய்யப்பட்டமையே ஆகும். மேலும் வடமராட்சி கிழக்குப் பகுதியில் உள்ள பெண்கள் பெரும் பிரச்சினைகளை எதிர் கொண்டு வருகின்றார்கள். குறிப்பாக ஒரு தாய் கூட தனிமையில் வீட்டில் வாழ முடியாத நிலை காணப்படுகின்றது.

முதலில் இங்கு அதிகளவான நிலை கொண்டுள்ள கடற்படை மற்றும் இராணுவத்தினர் வெளியேற்றப்பட வேண்டும். இதுமட்டுமல்லாமல் பணம் படைத்தவர்களிடம் இலஞ்சம் பெற்றுக் கொண்டு பக்கச்சார்பாக நடந்து கொள்ளும் பொலிஸாரும் இடமாற்றம் செய்யப்பட்டு நேர்மையான பொலிஸார் பதவியில் அமர்த்தப்பட வேண்டும். ஓட்டுக் குழுக்களின் செயற்பாடுகளையும் அடியோடு இல்லாமல் செய்ய வேண்டும். இதன் பின்பே வடமராட்சி கிழக்கின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றனர்.